Skip to main content

அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்... மு.க.ஸ்டாலின் 

 

"அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்க வேண்டும். பேரிடர் காலத்தில் மக்களின் துயரத்தைத் துடைப்பதும், அதில் பங்கெடுத்துக் கொள்வதும், மக்கள் நலன் காக்கும் பணிகளைச் செய்வோரைப் பாதுகாப்பதும்தான் ஓர் அரசின் தலையாய கடமை என்பதை மத்திய - மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொடர் ஊரடங்கு காரணமாகத் தமிழகம் முழுவதும் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் இழந்து நிற்கும் ஏழை - எளிய மக்களும், அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களின் ஒருவேளை உணவிற்குக்கூட நாள்தோறும் போராடி- அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 

mks


திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை ஆங்காங்கே அளித்து வந்தாலும் - வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு மேலும் தேவையான நிவாரணத்தை  வழங்கிட வேண்டிய மிக முக்கியமான கடமையும் பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.
 

இந்தச் சூழ்நிலையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகங்களை ஆளுங்கட்சியினருக்கு மட்டும் “குத்தகைக்கு” விட்டதைப் போல் தாரைவார்ப்பது நிச்சயமாக ஏற்புடையதல்ல. அரசு மானியத்தில்  நடத்தப்படும் அம்மா உணவகங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க.,வினரின் கைகளில் ஒப்படைத்திருப்பது மிகவும் மோசமான அரசியல் என்றாலும் - இப்போதைக்கு அதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் - தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களுக்கு வருவோர் அனைவருக்கும் அரசே இலவச உணவு வழங்கிடுவதே இந்த நேரத்தில் இன்னலுக்கு உள்ளாகியிருப்போருக்கு இதயப்பூர்வமாக ஆற்றும் பணியாகும்.

 

http://onelink.to/nknapp

 

கொரோனொ நோய்த் தொற்றைத் தடுப்பதிலும் - சுகாதாரப் பணிகளிலும் - சுற்றுப்புறச் சூழலை நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து தூய்மையாக வைத்திருப்பதிலும் முக்கியப் பங்காற்றுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள். “ஒருமாதச் சம்பளம் கொடுக்கவில்லை” என்று கரூர் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது. ஊதியம் கொடுப்பதைத் தாமதம் செய்வது, உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் உழைப்பை மதித்துப் போற்றுவதாகாது. கரூரில் மட்டும் இந்த நிலைமையா? அல்லது மாநிலம் முழுவதுமே இந்த அவல நிலைமையா என்பதை அரசு உடனடியாகக் கவனித்து, கரோனா தடுப்புப் பணி உள்ளிட்ட அனைத்துப் பணியிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு உடனடியாகச் சம்பளம் வழங்குவது, அவர்கள் ஆற்றிவரும் மகத்தான பணிக்கு நன்றிக் கடன் செலுத்துவதாக அமையும்.
 

செய்தி சேகரித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பத்திரிகையாளர்கள் பலருக்கும் கரோனா நோய் வந்திருக்கிறது என்று வெளிவந்துள்ள தகவல் எனக்கு மிகுந்த மன வேதனையைத் தருகிறது. களத்தில் நின்று மக்களின் கண்ணீர்க் குரல்களை எதிரொலித்துவரும் அவர்களே இந்த நோயின் தாக்கத்தால் இன்று கலங்கி நிற்பதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் போர்க்கால அடிப்படையில் கொரேனோ தொற்று நோய் பரிசோதனைகளைச் செய்வதும் - அரசு உள்ளிட்ட அனைவருமே ஊரடங்கு முடியும் வரை பத்திரிகையாளர் சந்திப்புகளை ரத்து செய்து - செய்திகளை மின்னஞ்சல் மூலம் சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதும் மிக முக்கியமான “பாதுகாப்பு” நடவடிக்கைகளாகும்.
 

ஊரடங்கில் சிக்கி - குறைந்தபட்ச வருமானமே இல்லாமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பவர்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த இயலாது. ஆகவே அரிசி பெறும் ரேசன் அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மின்சாரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்வது ஒன்றே அவர்களுக்கு அரசு நீட்டும் நேசக்கரமாக இருக்கும்.
 

ஆகவே, அம்மா உணவகங்களில் இலவச உணவு, தூய்மைப் பணியாளர்களுக்குச் சம்பளம், பத்திரிகையாளர்களுக்கு கொரோனோ பரிசோதனை, மின்சாரக் கட்டணம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட அ.தி.மு.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரவும், எமெர்ஜென்சி தேவைகளுக்காகவும் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகின்ற இந்த நெருக்கடியில், சுங்கச் சாவடிகளைத் திறந்து விட்டு - அங்கு சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வசூல் செய்வது எந்தவிதத்திலும் மனித நேயமற்ற - இதயத்தில் ஈரமில்லாத செயலாகும். இந்தக் கெடுபிடிகள், மளிகைச் சாமான்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வித்திடும். ஆகவே சுங்கக் கட்டண வசூலை உடனடியாக மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், பேரிடர் காலத்தில் மக்களின் துயரத்தைத் துடைப்பதும், அதில் பங்கெடுத்துக் கொள்வதும், மக்கள் நலன் காக்கும் பணிகளைச் செய்வோரைப் பாதுகாப்பதும்தான் ஓர் அரசின் தலையாய கடமை என்பதை மத்திய- மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும்" என்றும் கேட்டுக் கொள்கிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்