ADVERTISEMENT

அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

06:09 PM Jun 17, 2018 | Anonymous (not verified)


அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும். இது மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திமுக கருதுகிறது. அணைகள் பாதுகாப்பு குறித்து 1982-லேயே விவாதிக்கப்பட்டு, 1987-ல் முதல் வரைவு மசோதா வெளியிடப்பட்டாலும், மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் இந்த அணைகள் பாதுகாப்பு மசோதா இருந்ததால் கடும் எதிர்ப்பு உருவானது. அதனால் இருபத்தைந்து வருடம் கழித்து 2010ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போது,இந்த மசோதா முதன் முதலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும் மாநிலங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து,இந்த மசோதா மக்களவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் “விரும்பும் மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்தில் அணை பாதுகாப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றினால் இந்த அணை பாதுகாப்பு சட்டம் அந்த மாநிலத்திற்குப் பொருந்தும்” என்று மாநிலங்களுக்கு “விருப்புரிமை” வழங்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆனால் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, முதலில் “2016 மசோதா” என்றும், இப்போது “2018 மசோதா” என்றும் பெயர் மாற்றம் பெற்று, நாட்டில் உள்ள ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைகளைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் அந்த “விருப்புரிமை” மாநிலங்களுக்கு வழங்கப்படாமல் பறிக்கப்பட்டிருக்கிறது. மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒரு அதிகாரத்தையே அபகரித்திடும் உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் இந்த மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள எந்த மத்திய அரசும், மாநிலங்களையும் அவற்றின் உரிமைகளையும் பாதிக்கும் இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற முன் வராது;மாநில அரசுகளின் அதிகாரத்தையும் கைப்பற்றித் தன்பைக்குள் போட்டுக்கொள்ள நினைக்காது. அதை மீறி இப்படியொரு மசோதாவை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. அரசு , “2018 அணை பாதுகாப்பு மசோதாவை” இதுவரை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்கும் அடிப்படை ஜனநாயகக் கடமையைக்கூட நிறைவேற்றவில்லை. அதற்குள் மத்திய அமைச்சரவை மாநிலங்களைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன்னிச்சையாகவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள “பொதுப்பட்டியல்” அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துவந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது மாநிலப் பட்டியல் பிரிவு 17ல் இருக்கும் இந்த அதிகாரத்திலும் கை வைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனுமே நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் தொடர்பில் உள்ள மாநிலம் ஆகும். இதை விட முக்கியமாக முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளாவில் இருந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த “அணை பாதுகாப்பு சட்டம்” தமிழகத்திற்கு உள்ள அந்த உரிமையை நிலைநாட்டியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு, பாஜகவின் புதிய மசோதாவில் ரகசியமும் மர்மமும் பாதுகாக்கப்படுகிறது. இந்தப் புதிய வரைவு மசோதா தமிழக அரசுக்கு இதுவரை அனுப்பப்படவில்லை. அணைகள் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது மாநில அரசின் கடமை. அந்தப் பொறுப்புணர்வு எந்த மாநில அரசுக்கும் இருக்கும் என்பதை மத்திய அரசு ஏனோ உணரத் தவறி, இது போன்ற மசோதாவைக் கொண்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் அமையவிருக்கும் ஒரு ஆணையம்,மேட்டூர் அணை, கல்லணை போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யும் என்பது ,மக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் அப்பட்டமாகக் குறுக்கிடுவதாகும்.

ஆகவே மாநிலப் பட்டியலில் இருக்கும் அதிகாரத்தைப் புறக்கணித்திடும் விதத்தில், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பை மாநில அரசே கவனித்துக் கொள்ளும் என்றும்; அணைகளின் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும் என்றும்; மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று என்றும்; அதிமுக அரசு நடப்பு சட்ட மன்றக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பாஜக அரசின் இந்த எதிர்மறை முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ள அதிகாரங்களைப் பறிக்கும் இது போன்ற எதேச்சதிகாரச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு, மோதல் போக்கைப் பின்பற்றிவருவதை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, மத்திய - மாநில அரசுகளிடையே சுமுகமான நல்லுறவுகளை வளர்த்து,அவற்றை மதித்துப்போற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT