/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/stalin 5_0.jpg)
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தருமபுரி சென்றுள்ளார். இன்று காலை தருமபுரி அரசு மருத்துவமனையில் தாய் சேய் தீவிர சிகிச்சைப் பிரிவைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து யானை பள்ளம் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் உள்ள நீர் உறிஞ்சும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பென்னாகரத்தில் உள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளிக்குச் சென்ற அவர் அங்கு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களிடம் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து முதல்வரிடம் மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், மின்விசிறி முதலியவை அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உடனடியாக அமைத்துத் தர ஏற்பாடு செய்கிறேன் என்று முதல்வர் உறுதி அளித்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு சமைக்கும் இடத்திற்குச் சென்ற அவர் மாணவர்களுக்குத் தயார் செய்யப்பட்ட உணவு குறித்துக் கேட்டறிந்தார். உணவு வகைகளைப் பார்த்த அவர் பொரியல் எதுவும் இல்லையா? என்று கேட்டார். மேலும், மாணவர் ஒருவர், அருகில் நின்ற மாணவரைக் காட்டி இன்றைக்கு இவருக்குப் பிறந்த நாள் என்று சொல்ல, சம்பந்தப்பட்ட மாணவருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார் மு.க ஸிடாலின். இதைத் தொடர்ந்து மாணவர்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Follow Us