
புதுச்சேரியில் நிகழ்ந்த வாகன விபத்தில் திமுக எம்பியின் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியிலிருந்து சென்னை திரும்பும் பொழுது தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராகேஷ் என்ற 22 வயது இளைஞர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த ராகேஷ் திமுக மாநிலங்களவை எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் திமுக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் எம்.பி என்.ஆர்.இளங்கோவின் மகன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், 'கழகத்தின் மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோவின் அன்பு மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரச்செய்தி கேட்டு - மிகுந்த வேதனைக்கும் - சொல்லொணாத் துயரத்திற்கும் உள்ளானேன். ராகேஷ் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகக் குடும்பத்தில் ஒருவராக இருந்து பல்வேறு வழக்குகளில் கழகத்திற்காக வாதிட்டு வரும் என்.ஆர்.இளங்கோ சகோதரர் சமீபத்தில் மறைந்த நிலையில், அவரது மகனும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். என்.ஆர்.இளங்கோ எத்தகைய வேதனைக்கு ஆளாகியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே உடலும் உள்ளமும் அஞ்சி நடுங்குகிறது.
அன்புக்குரிய மகனை இழந்து வாடும் என்.ஆர். இளங்கோவிற்கும்- அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனத்தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)