Advertisment

வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருக்க வேண்டும்- கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்!

மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும் என கட்சியினருக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்.

Advertisment

stalin

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்னும் மூன்றே நாட்களில் இந்திய மக்கள் எழுதியிருக்கும் தீர்ப்பு வெளிவரப் போகிறது. அதன் விளைவாக, ஆட்சி மாற்றம் ஏற்படவிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் இரண்டு ஆட்சிகளை மாற்றுவதற்கானத் தீர்ப்புகளை எழுதியிருக்கிறார்கள். ஜனநாயக ரீதியில் மக்கள் எழுதிய தீர்ப்புகளை அதிகாரத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படித் திருத்தி எழுதலாம் என ஆட்சியில் இருப்பவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டிய கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது.

Advertisment

மே 23ந் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். காலதாமதம் என்பதே கூடாது. வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவுக்குப் பிறகு, இயந்திரங்களுக்கு வைக்கப்பட்ட சீல் முறையாக உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும்.

பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் உள்ள வாக்குகளும் சரியான அளவில் உள்ளனவா என்பதை ஒப்பீடு செய்ய வேண்டும். எண்ணிக்கையில் சந்தேகம் இருப்பின், மாதிரி வாக்குப்பதிவுக்கு வலியுறுத்தி, வாக்கு இயந்திரத்தின் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்வது பற்றி, வாக்கு மையத்தில் உள்ள அதிகாரிகள் பலருக்கும் மத்திய-மாநில ஆட்சியாளர்களால் நிறைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் எச்சரிக்கையாகவே வெளியிட்டுள்ளன. அந்த எச்சரிக்கையை நாமும் அலட்சிப்படுத்திவிடக் கூடாது.

தேர்தல் ஆணையத்தின் கைகளைப் பின்பக்கமாக வைத்துக் கட்டியுள்ள மத்திய-மாநில அரசுகள் தங்களின் அதிகார வெறிக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய நிலை உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு எதிரான மிகக் கொந்தளிப்பான மனநிலையில் இருக்கிறார்கள் என்பது ஆட்சியாளர்களுக்குத் தெரிந்திருந்தும், என்னவெல்லாம் செய்து, தி.மு.கழகம் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வெற்றியைத் தடுக்க முடியும் எனத் திட்டமிட்டு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகின்றனர்.

தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள், 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அவர்கள் கவனம் செலுத்தும் நிலையில் மிகக் குறிப்பாக, கோயம்பூத்தூர், ராமநாதபுரம், கரூர், தேனி இந்த 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற எந்த எல்லைக்கும் செல்லும் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான உத்தரவுகள் அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கின்றன.

எனவே, நமது வாக்கு எண்ணிக்கை மைய முகவர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், வேட்பாளர்களும் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் மிகவும் விழிப்புடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, ஆளுந்தரப்பு மற்றும் அதிகாரிகளின் மோசடித்தனங்கள் நடைபெறாத வகையில் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் எழுதியுள்ள வெற்றித் தீர்ப்பினை உறுதி செய்யவேண்டிய பெரும் பொறுப்பு உங்கள் தோள்களில் உள்ளது. அறுவடை நேரத்தில் அசதி ஏற்பட்டால், நொடிப் பொழுதில் அதனைக் களவாடிச் செல்ல அதிகாரத்தில் இருப்போர் தயாராக இருக்கிறார்கள். எனவே, வெற்றியை அறுவடை செய்யும் நாளான மே 23 அன்று வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள முகவர்கள் அதிக கவனத்துடன் செயல்படவேண்டும் என அறிவுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe