
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, திமுக தலைமையிலான கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, பெரும்பான்மைக்கு 118 சட்டமன்றத் தொகுதிகள் தேவை என்ற நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இதனால் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது.
நாளை (04/05/2021) நடைபெறவுள்ள திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ஆட்சிமன்றக் குழு தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 7ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் தமிழகத்தின் முதல்வராக, முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அத்துடன், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க உள்ளதாகவும், பதவியேற்பு விழா கரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, சென்னை கோபாலபுரத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலின், தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்றார். அதைத் தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு, முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.