mk Stalin has said that  BJP is acting as a WhatsApp university to spread rumours

Advertisment

“பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சேலம் மாநாடு வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “சேலத்தில் எழுச்சியுடன் நடந்தேறிய கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. மாநாட்டுப் பந்தலைக் கடந்து, வளாகம் நிறைந்து, நெடுஞ்சாலை முழுவதும் திரண்டிருந்த இளைஞர் பட்டாளம், கழகத்தின் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.

சிறுபான்மை மதத்தினருக்கு மட்டுமின்றி, இந்து மதத்தில் பெரும்பான்மையாக உள்ள பிற்படுத்தப்பட்ட - மிகப் பிற்படுத்தப்பட்ட - பட்டியல் இன - பழங்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்து, உண்மையான இந்து விரோதியாகச் செயல்பட்டு வரும் பா.ஜக. அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்திட சூளுரை மேற்கொண்டிருக்கிறது தம்பி உதயநிதி வழிநடத்துகிற இளைஞரணி.

Advertisment

ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது. அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த நிலையில்தான் இருக்கிறார்,தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள மதிப்பிற்குரிய ஆர்.என். ரவி அவர்கள். தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமாளையும் வழிபடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டின் மகத்தான வெற்றி கண்டு அலறுகின்ற கழகத்தின் அரசியல் எதிரிகளும், தமிழ்நாட்டின் நிரந்தர எதிரிகளும் வதந்திகளைப் பரப்பி திசைதிருப்ப நினைத்தாலும், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும், வில்லில் தொடுக்கப்பட்ட கணை தனது இலக்கை மட்டுமே குறி வைப்பதுபோல செயல்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.