Skip to main content

காரை விட்டு இறங்கி சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மு.க.ஸ்டாலின்! சேலத்தில் உற்சாகம்!!

Published on 13/06/2021 | Edited on 13/06/2021

 

MK Stalin got out of the car and received petitions from the people! Excitement in Salem !!

 

சேலம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை மாலையில் சேலம் வந்தார். சனிக்கிழமை (ஜூன் 12) காலை அவர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

 

முன்னதாக சேலம் ஆய்வு மாளிகையில் தங்கியிருந்த அவர், மேட்டூர் அணை திறப்புக்காக கிளம்பினார். அப்போது தங்கும் விடுதியின் வெளியே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்தனர். அவர்களைக் கண்ட முதல்வர், உடனடியாக வாகனத்தை விட்டு கீழே இறங்கிச்சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.



பின்னர் சிறிது தூரம் காரில் சென்ற முதல்வர், அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை மனுக்களுடன் காத்திருப்பதை அறிந்தார். உடனடியாக காரை நிறுத்தி, அவர்களிடம் நேரில் சென்று மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.


 

MK Stalin got out of the car and received petitions from the people! Excitement in Salem !!



அப்போது அவர், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் திமுக தொண்டர்கள் முதல்வருக்கு வரவேற்பு அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட அவர் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போதும் மக்களிடம் கோரிக்கை மனுக்கைப் பெற்றார்.



அழகாபுரம் பகுதியில் சாலையில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோரிக்கை மனுவுடன் காத்திருப்பதை கவனித்துவிட்ட மு.க.ஸ்டாலின், வாகனத்தை நிறுத்தி, அவரிடமும் மனுவைப் பெற்றுக்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து இறங்கிச்சென்று மக்களை நெருங்கி நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டதால் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாகம் அடைந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
CM MK Stalin order to open water in Mettur Dam

டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களைக் காத்திட மேட்டூர் அணையில் இருந்து இன்று (03.02.2024) முதல் இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவ மழைப்பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக்குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 59 ஏக்கரும், என மொத்தம் 22 ஆயிரத்து 774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது. எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டி.எம்.சி. (TMC) தண்ணீரை இன்று (03.02.2024) முதல் திறந்துவிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே. விவசாயிகள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன்படுத்தி சம்பா நெற்பயிரைப் பாதுகாத்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேட்டூர் அணையில் நீர் திறக்க உத்தரவு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Order to open water in Mettur Dam

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் நீர் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சம்பா பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 4,715 ஏக்கரும், நாகையில் 18,059 ஏக்கரும் தண்ணீர் பற்றாக்குறையால் சம்பா நெற்பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளது.

இதனால் விவசாயிகள் முதல்வரிடம் நீர் திறக்க கோரிக்கை வைத்திருந்ததை தொடர்ந்து தமிழக முதல்வர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். மேட்டூரில் பாசனத்திற்கு நீர் திறப்பதற்காக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 30 குழுக்கள் அமைக்கப்பட்டு 298 கிராமங்களில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.