MK Stalin condemns cylinder price hike

Advertisment

கரோனா நெருக்கடியில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்து வரும் சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடுமையாக உயர்த்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து, தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி. தலைமையில் வருகிற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "15 நாள் இடைவெளிக்குள் இருமுறை கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் மத்திய பா.ஜ.க. அரசு உயர்த்தியிருப்பதும், தொடர்ச்சியாக அதன் விலையை உயர்த்தி வருவதும், இந்தியக் குடும்பங்களின் ‘குடும்ப வரவு செலவுக் கணக்கில்’ கடும் பற்றாக்குறை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா கொடுங்காலத்தில் – பெரும்பாலான குடும்பங்களில், யாராவது ஒருவர் வேலை வாய்ப்பை இழக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. பல குடும்பங்களில் குடும்பத் தலைவரே வேலை வாய்ப்பைப் பறிகொடுத்து, பொருளாதார ரீதியாகப் பலவீனப்பட்டு நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது.

ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பங்கள் எல்லாம் இதுவரை சந்தித்திராத வருமான இழப்பையும் சரிவையும் இந்த கரோனா காலத்தில் சந்தித்துள்ளன. ‘நிவர்’ புயல் பாதிப்பில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தும் அரசின் நிவாரண உதவி எதுவும் வந்தடையாமலும், பல்வேறு பிரச்சனைகளால் சூழப்பட்டு, மிகுந்த தவிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் கூட, வேலைக் குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பொருளாதாரம் ஏற்கனவே நடந்து வந்த பாதையைத் தொலைத்து விட்டு – முட்டுச் சந்தில் நின்றுவிட்டது.

Advertisment

இது போன்ற அசாதாரணமான சூழ்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்று இதயத்தில் ஈரமில்லாமல் மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துக் கொண்டே இருப்பது மனித நேயமற்றது மட்டுமின்றி, நாட்டு மக்களின் வாழ்க்கைப் பின்புலம் அறியாத அலட்சியமும் ஆகும். கடந்த மே மாதத்திலிருந்து 5 முறை கேஸ் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 15 நாள் இடைவெளியில் 50 ரூபாய் என இரு முறை உயர்த்தி ஒரு கேஸ் சிலிண்டரின் விலையை 710 ஆக அதிகரித்திருப்பது தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது.

கரோனா காலத்தில் கிடைக்கின்ற சொற்ப வருவாயைக் கொண்டு, சிக்கனமாகக் குடும்பத்தை நடத்த வேண்டிய கடுமையான கட்டாயத்தில் இருக்கும் தாய்மார்களுக்கு, இந்த விலை உயர்வு தாங்க முடியாத பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர் விலை, அத்தியாவசியப் பொருட்களின் விலை எல்லாமே மத்திய பா.ஜ.க. ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. அதைத் தடுத்து, தாய்மார்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை உள்ள ஆட்சியாளர்கள், அதை மறந்து, கண்ணை மூடிக் கொண்டு அடுத்த கட்டமாக எவ்வளவு விலை உயர்த்தலாம் என்று சர்வாதிகார ஆணவத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ஒவ்வொரு இல்லத்திலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள 100 ரூபாய் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும்; இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும்; மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, வருகின்ற 21.12.2020 திங்கட்கிழமை அன்று மாலை 3.30 மணி அளவில், திராவிட முன்னேற்றக் கழக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் உள்ள மகளிரணியினரின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம், அமைதியான முறையில் அற வழியில், நடைபெறும்.

Advertisment

அந்தந்த மாவட்ட மகளிரணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டு கட்சி சார்பற்ற முறையில் அனைத்துத் தரப்பு மகளிரையும் ஒன்று திரட்டி, இந்தப் பெருந்திரள் மகளிர் ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றிப் போராட்டமாக நடத்திட வேண்டும். தமிழகத் தாய்மார்கள் எழுப்பும் முழக்கம் தலைநகர் டெல்லிக்கு எட்டட்டும்!” என்று தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.