Skip to main content

தமிழ்மொழியை புறக்கணிப்பது மத்திய அரசின் பாகுபாட்டு உணர்வையும் – வெறுப்பையும் வெளிப்படுத்துகிறது: மு.க.ஸ்டாலின்

Published on 30/04/2018 | Edited on 30/04/2018
MK Stalin


“சமஸ்கிருதத்தை தங்கக்கட்டிலில் சீராட்டி - தமிழ்மொழியை புறக்கணிப்பது மத்திய பா.ஜ.க. அரசின் பாகுபாட்டு உணர்வையும் – வெறுப்பையும் வெளிப்படுத்துகிறது” என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

2018 ஆம் ஆண்டுக்கான, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்குவதில், இந்திய திருநாட்டின் மூத்த மொழியும், திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியும், உயர்தனிச் செம்மொழியுமான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த விருதுகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் சமஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி அந்தஸ்து பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அதில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் இடம்பெறவில்லை என்பது, மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்மொழி மீது கொண்டுள்ள ஆழமான வெறுப்பையும், பாகுபாட்டு உணர்வையும் காட்டுகிறது. 
 

தமிழ்மொழி மீது பற்றுள்ளவர்கள் போல, தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்கள் வெறும் வார்த்தைகளால் கபட நாடகம் ஆடுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியோ “தமிழ் அழகான மொழி”, “பழமையான மொழி”, “அந்த மொழியில் வணக்கம் மட்டுமே எனக்கு சொல்ல முடிகிறது என்று வருந்துகிறேன்”, என்றெல்லாம் பேசி, தமிழ்மொழி மீது தனக்கு பாசம் இருப்பது போன்று வஞ்சப் புகழ்ச்சி பேசுகிறார். ஆனால், இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே என்பது தமிழ்மொழியைப் புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிகிறது. 
 

சமஸ்கிருதத்தை தங்கக் கட்டிலில் வைத்து சீராட்ட விரும்பும் மத்திய பா.ஜ.க. அரசு, இலக்கண - இலக்கிய வளம்செறிந்த மிகத்தொன்மை வாய்ந்த அன்னைத் தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொரு முறையும் மனசாட்சியின்றி - கூச்சமின்றி ஈடுபடுகிறது. குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் செம்மொழி தமிழ் புறக்கணிக்கப்பட்டு இருப்பது, தமிழினத்திற்கு மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க. செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். இதை எந்தவொரு தமிழனும் மன்னிக்கமாட்டான் என்பதையும் மத்திய பா.ஜ.க. அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். வழக்கம்போல், தமிழ்மொழிக்கு நேரும் அவமானம் குறித்தெல்லாம் கவலைப்படும் நிலையில், இங்குள்ள அதிமுக அரசும் இல்லை அல்லது மத்திய பா.ஜ.க. அரசைத் தட்டிக் கேட்கும் நிலையில் அதிமுக எம்.பி.க்களும் இல்லை என்பது தமிழகத்தின் மிகமோசமான வாய்ப்பாக அமைந்துள்ளது வேதனையளிக்கிறது. 
 

ஆகவே, 2018-ஆம் ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் செம்மொழியாம் தமிழ்மொழியில் உள்ள சிறந்த அறிஞர்களுக்கும் விருது வழங்கும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு, தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

“பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்” - இ.பி.எஸ்.ஸுக்கு முதல்வர் பதிலடி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி காற்றிலேயே கம்பு சுற்றுபவர். இப்போது நடப்பது நாடாளுமன்றத் தேர்தல் பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.  மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நாடகம் நடத்துகிறார். எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா?.

பிரதமர் பற்றி மட்டுமல்ல. ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை. இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார். ‘ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?’ என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது?. நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும் வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள்.

"Try to rescue ADMK from BJP" - Chief Minister's response to EPS

அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை. ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான். அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள் மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்.

பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக, தமிழர்களுக்கு எதிராக, தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?. துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள். பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி, பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி, அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது” எனப் பேசினார்.