Skip to main content

தமிழ்நாட்டை சுடுகாடாக்க திட்டமிட்டு பிரதமர் மோடி அரசு செயல்படுகிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 31/03/2018 | Edited on 31/03/2018

 

mkstalin



 

ஒட்டுமொத்தமாக இந்தத் தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்றிட வேண்டுமென்று திட்டமிட்டு, மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 

திமுக செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (31-03-2018) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையிலான நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு நடைபயணத்தை, மதுரை பழங்காநத்தத்தில் தொடங்கி வைத்தார். 
 

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின்,  
 

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மதுரை முதல் கம்பம் வரை விழிப்புணர்வு நடைபயணத்தை 10 நாட்கள் நடத்துவதற்காக புறப்பட்டு இருக்கின்ற, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், என்னுடைய ஆருயிர் அண்ணன் வைகோ அவர்களே, முன்னிலை பொறுப்பேற்றுள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடிகள், நிர்வாகிகள் திருப்பூர் துரைசாமி அவர்களே, கணேசமூர்த்தி அவர்களே, மல்லை சத்யா அவர்களே, துரை பாலகிருஷ்ணன் அவர்களே, ஏ.கே.மணி அவர்களே, வாழ்த்துரை வழங்கி அமர்ந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என் அன்பிற்கினிய அருமை சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே, கம்பம் கே.எம்.அப்பாஸ் அவர்களே, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, மேடையில் வீற்றிருக்கின்ற மதிப்புக்குரிய கொளத்தூர் மணி அவர்களே, கோவை ராமகிருஷ்ணன் அவர்களே, சுப.உதயகுமார் அவர்களே, சுந்தரராஜன் அவர்களே, தியாகு அவர்களே, தெகலான் பாகவி அவர்களே, இயக்குநர் கவுதமன் அவர்களே, பஷூர் அகமது அவர்களே, கதிரவன் அவர்களே, என்.ஆர்.தனபாலன் அவர்களே, அமாவாசை அவர்களே, நிகழ்ச்சியின் நிறைவாக நன்றி நல்கவிருக்கின்ற பூமிநாதன் அவர்களே, நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகளே, பல்வேறு தோழமைக் கட்சிகளை சார்ந்திருக்கின்ற தோழர்களே, திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்பட பல்வேறு கட்சிகளின் மாவட்ட கழக செயலாளர்களே, நிர்வாகிகளே, நண்பர்களே, தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நண்பர்களே, அன்பர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
 

mkstalin


அண்ணன் வைகோ அவர்கள், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று முதல் பத்து நாள் பயணமாக ஒரு பேரணியை தொடங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கேற்று, பேரணியை துவக்கி வைக்கின்ற சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எப்படி அண்ணன் வைகோ அவர்கள் இந்தப் பயணத்தினை நடத்துவதன் மூலம் வரலாற்றில் இடம்பெறுவது போல, இந்தப் பயணத்தை தொடங்கி வைக்கின்ற நானும் அந்த வரலாற்றில் இடம்பெற போகிறேன் என்ற பெருமையோடு, இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நான் வந்திருக்கிறேன். இது எதிர்ப்புப் பேரணி மட்டுமல்ல, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியாக அமைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணன் வைகோ அவர்கள் இன்று நேற்றல்ல, கடந்த 20 ஆண்டுகாலமாக சுற்றுப்புறச்சூழலுக்காக எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம், அது மக்கள் மன்றமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருப்பவர்.
 

 

இன்று தொடங்குகின்ற விழிப்புணர்வுப் பேரணியானது ஒரு தன்னெழுச்சிப் பேரணியாக உருவெடுக்கப் போகிறது என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டியதில்லை என்று நான் உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். திடீரென்று இந்தப் போராட்டத்தை நடத்திட அண்ணன் வைகோ அவர்கள் முன் வரவில்லை. நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, அதில் தானே ஆஜராகி வாதிட்டவர். அதனால், இந்தப் பயணத்தை இன்றைக்கு நடத்த முற்பட்டு இருக்கிறார்.
 

mkstalin


கற்புக்கரசி கண்ணகி, மன்னன் பாண்டிய நெடுஞ்செழியனிடம் நீதிகேட்டு இந்த மதுரையில் புறப்பட்டார். அதுபோல, அண்ணன் வைகோ அவர்களும் வரலாற்று சிறப்புக்குரிய இந்த மதுரையில் இருந்து இன்று நீதிகேட்டு, நியாயம் கேட்டு இந்தப் பயணத்தை தொடங்குகிறார். மக்களுடைய பாதுகாப்பு, குடிநீர் பிரச்னை ஆகியவற்றை மையமாக வைத்து இந்தப் பயணத்தை அவர் நடத்துகிறார் என்றால் காரணம், இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற ஆட்சி மக்களைப் பற்றியும் கவலைப்படவில்லை, இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி சிந்தித்தும் பார்க்கவில்லை, மக்களிடையே கதிரியக்கம் எந்தளவுக்கு தாக்கும் என்பதை பற்றியும் எண்ணி பார்க்கவில்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இதனால் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும் என்பது பற்றியும் கவலைப்படவில்லை.
 

 

ஒட்டுமொத்தமாக, இந்தத் தமிழ்நாட்டையே சுடுகாடாக மாற்றிட வேண்டுமென்று திட்டமிட்டு, மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி தரும் கொடுமைகளை நாம் இன்றைக்கு தொடர்ந்து பார்க்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள சில மண்டலங்களை தேர்வு செய்து, அங்கு நச்சு திட்டங்களை கொண்டு வந்து, நிறைவேற்றுகின்ற முயற்சியில், மோடி தலைமையிலான பிஜேபி ஆட்சி ஈடுபட்டு வருகிறது. உதாரணமாக, தேனியில் நியூட்ரினோ திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத் திட்டம், மத்திய மண்டலத்தில் உள்ள புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் திட்டம், காவிரி படுகையில் உள்ள கதிராமங்களத்தில் எரிவாயு எடுக்க ஆழ்கிணறுகள் தோண்டும் திட்டம், வட மாவட்டமான கடலூரில் பெட்ரோ கெமிக்கல், மேற்கு மாவட்டங்களில் இருக்கின்ற விவசாய நிலங்களுக்குள் கெயில் குழாய்கள் பதிக்கும் திட்டம், என தமிழகத்தின் பல மண்டலங்களை தேர்வு செய்து, மக்களை ஆபத்தான குழிகளில் தள்ளுகின்ற கொடுமையை மத்திய பிஜேபி ஆட்சி தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறது.
 

mkstalin


இந்தித் திணிப்பை தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். பறிக்கப்பட்டு வரும் நம் மாநில உரிமைகளை நாம் மீட்க, மாநில சுயாட்சிக்காக நாம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என குரல் கொடுக்கிறோம். சமூகநீதிக்காக குரல் கொடுக்கிறோம். நிதி நிலையில் தன்னாட்சி பெற வேண்டும். ஒரே வரியில் சொல்வதென்றால், தன்மானத்தோடும் சுயமரியாதை உணர்வோடும் நாம் வாழ்ந்திட வேண்டுமென்று நாம் தொடர்ந்து குரல் கொடுத்து, நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறோம். இவையெல்லாம் பிரதமர் மோடி அவர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, தமிழர்களையும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவர்களுக்குப் பிடிக்காத காரணத்தினால், இப்படிப்பட்ட நிலையை தமிழ்நாட்டில் உருவாக்கி வருகிறார்கள்.
 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென்று, உச்ச நீதிமன்ற இருமுறை தனது தீர்ப்பில் தெளிவாக தெரிவித்துள்ளது. 4 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென்று முதலில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த நேரத்தில், இதே பிஜேபி ஆட்சி உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் தந்துவிட்டு, அதன் பிறகு திடீரென, ”உச்ச நீதிமன்றத்துக்கு அப்படி ஆணையிட அதிகாரம் கிடையாது, உச்ச நீதிமன்றம் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது, நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது”, என்று பல்டியடித்தனர். இம்முறை நடந்திருப்பது என்ன?
 

 

அண்மையில், “ஆறு வாரகாலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டும். கால நீட்டிப்பு கிடையாது”, என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பளித்தது. மத்திய அரசு உடனே, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்து, நாடாளுமன்றத்தில் வைத்திருக்க வேண்டும். ஆனால், நேற்றைக்கு முன் தினம் உச்ச நீதிமன்றத்தில், “ஸ்கீம் என்பது என்ன?”, என்று விளக்கம் கேட்டிருக்கிறது. உத்திரவு போட்டு 42 நாட்கள் ஆகிவிட்டன. ஆறுவார காலக்கெடு முடிகின்ற நேரத்தில், சாகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்வது போல, கடைசி நிமிடத்தில் விளக்கம் கேட்கின்ற நாடகத்தை, மத்திய அரசு நடத்தியிருக்கிறது என்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால், நீதித்துறையின் சுதந்திரம் எந்தளவுக்கு கீழே தள்ளப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 

 

எனவே தான், அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டுமென்று நாங்கள் எல்லாம் குரல் கொடுத்தோம். வேறு வழியின்றி அரசு கூட்டம் நடத்தியது. அதில், ஆறுவார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டு இருக்கிறது. ஆனால், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கட்கரி அவர்களும், அந்தத் துறையின் செயலாளரும் அதை மறுத்து, அலட்சியப்படுத்தி பேசுகிறார்கள். எனவே, பிரதமரை சந்தித்து அழுத்தம் தர வேண்டுமென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி, அனைத்து கட்சி கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பினோம். ஆனால், பதில் வரவில்லை. அதன் பிறகு, சட்டமன்றத்தை கூட்டுங்கள் என்று சொல்லி, அங்கும் ஒரு தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கும் பதில் வரவில்லை.
 

mkstalin


எனவே, ஆளும் கட்சியாக இருக்கின்ற அதிமுகவில் ராஜ்யசபையை சேர்த்து மொத்தம் இருக்கின்ற 50 எம்.பி.க்கள் ராஜினாமா செய்வோம் என்று அழுத்தம் தாருங்கள் என்றோம். அதுமட்டுமல்ல, சட்டமன்றத்தில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில், அதிமுக முன்வந்தால், திமுகவின் சார்பில் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம், என்று தெரிவித்தேன். ஆனால், அதற்கும் பயனில்லை. எனவே, தமிழக மக்களுக்கும், தமிழக விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் ஆட்சியாக மோடி தலைமையிலான மத்திய ஆட்சி நடைபெறுகிறது.
 

 

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள், இதே நியூட்ரினோ திட்டத்தை, “ஆபத்தான திட்டம்”, என்று தெளிவாக எடுத்துச் சொன்னார். அவர் மட்டுமல்ல, 28.03.2018 அன்று மத்திய அரசு வழங்கியிருக்கின்ற அனுமதியில், இந்தத் திட்டத்தில் உள்ள ஆபத்து பற்றி அவர்களே குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி மத்திய பிஜேபி ஆட்சி இன்றைக்கு அனுமதி தந்திருக்கிறது என்றால், அண்ணன் வைகோ நடத்தக்கூடிய பேரணி, மக்களுக்கு மட்டுமல்ல, ஆட்சிக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும், என்ற நிலையில் தான், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, வாழ்த்துகிறோம்.
 

 

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றும் முடிவெடுத்து, பணிகள் தொடங்கப்பட்டு, இடையில் நிறுத்தப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? பாரம்பரியமிக்க ராமர் பாலம் அங்கிருக்கிறது என்று சொல்லி, சதித்திட்டம் தீட்டி, அந்தத் திட்டத்தை நிறுத்தினார்கள். நான் கேட்கிறேன், “மிகுந்த பாரம்பரியமிக்கது இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இந்தத் திட்டத்தால் அதற்கு என்னென்ன ஆபத்துகள் விளையும்”, என்று யுனெஸ்கோ சொல்லியிருக்கிறது. அதையும் மீறி இந்தத் திட்டம் நிறைவேற்றுவீர்கள் என்று சொன்னால், உங்களுக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? என்று கேட்டு, இந்தப் பயணம் வெற்றி பயணமாக அமைந்திட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், குறிப்பாக தலைவர் கலைஞர் அவர்களின் சார்பில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து, பயணம் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்போம் என்று கூறி, விடைபெறுகிறேன். இவ்வாறு உரையாற்றினார்.
 

சார்ந்த செய்திகள்