தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது  இல்லத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து மு.க. முத்து மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “நான் நீண்ட நேரம் வெயிலில் பசியோடு நின்றபோது மயங்கி விழுந்து விட்டேன். அப்போது  முதல்வர் மு.க. ஸ்டாலின் போன் மூலம் என்னை உடனே அழைத்து உடம்பை கவனமாக பாத்துக்கிறது இல்லையா இப்படியா இருக்கிறதென்று அன்பா விசாரித்தார்.

என்னுடைய அப்பா இறந்து போது நீங்கள் ஆறுதலாக இருங்கள்.நான் அமைச்சர் பெரியகருப்பனை அனுப்புகிறேன். அவர் தான் எங்கள் மாவட்ட அமைச்சர்.  அடுத்த நாள் அவர் வந்து எனக்கு ஆறுதலாக நின்றார். அதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனித மாண்பும் பண்பும். அந்த அடிப்படையில்  இப்போது அந்த வீட்டு இழப்பு என்பது  நம்ம வீட்டு இழப்பு. அதற்கு வந்து அந்த துயரத்தை நான் உங்களோடு அருகிலிருந்து பகிர்ந்து கொண்டு செல்கிறேன் அவ்வளவுதான். பாஜகவும், காங்கிரஸும் எதிரெதிராக இருக்கிறது. ஆனால் அத்வானியும், சோனியா காந்தியும் பக்கத்தில் இருந்து ஒரே இடத்தில் தேநீர் அருந்திக் கொண்டு மக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் கேரளாவில் எதிர எதிரா இருக்கிறது. உம்மன் சாண்டி, பினராயி விஜயனுக்கு அழைத்துப் பேசி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் காமரேட், உங்களிடம் பேசவேண்டும், அவர் வீட்டில் இருப்பதால் அந்த வழியத்தான் வந்துகொண்டு இருக்கிறேன் இருங்கள் வந்துருவோம் சொல்லி 2 பேரும் உட்கார்ந்து அரசியலைத் தாண்டி மக்கள் நலனுக்காகத் தான் பேசுகிறார்கள். அப்போது அதுதான் முக்கியம். இந்த நாகரிகம் தான் இந்த நிலத்தில் இல்லாமல் போயிருச்சு. அது கொஞ்சம் கொஞ்சமா  மலர வேண்டும். இங்கே சாதிய தீண்டாமையை விடக் கொடுமையாக அரசியல் தீண்டாமை இருக்கிறது.

தேவேந்திரர் வீட்டுப் பெண்ணைத் தேவர் வீட்டுப் பையன் திருமணம் செய்துகொள்ள முடியும். அவர்கள் வாழ்ந்துவிட முடியும். இந்து வீட்டுப் பெண்ணை இஸ்லாமியப் பையன் திருமணம் செய்து வாழ்ந்து விட  முடியும். ஆனால் அதிமுக மாவட்டச் செயலாளர் மகளை திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியுமான்னு யோசித்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய சிக்கல் இருக்குன்னு பாருங்கள். தாமரைக்கனி இறந்ததுக்கு இன்ப தமிழன் போக முடியவில்லை, பெற்ற அப்பா இறந்ததற்கு மகன் செல்ல முடியவில்லை.

Advertisment

தமிழன் இனத்துக்கு  மாண்பு, ஒரு நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறையென்று இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி காமராஜர் இறந்ததற்கு அதிகமாக அழுதது பேரறிஞர் அண்ணா தான் என்பார்கள். பேரறிஞர் அண்ணா அமெரிக்கா போகும் போது நிக்சனை சந்திக்க விரும்புகிறார். ஆனால்  நிக்சன் அனுமதி தரவில்லை. அதே நிக்சன் இந்தியா வரும் போது பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால் காமராஜர், அண்ணா துரையைச் சந்திக்காத நிக்சனை நான் போய் எதற்கு சந்திக்க வேண்டும் என்று கூறுகிறார். மூதறிஞர் ராஜாஜிக்கும், தந்தை பெரியாரும் கருத்து முரண்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் ராஜாஜி இறந்ததுக்கு அழுதது பெரியார்தான்” எனப் பேசினார்.