Mixing crude oil with rainwater; national Green Tribunal case

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருவொற்றியூர் பகுதியில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதால் ஆற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தண்ணீரில் கலந்த எண்ணெய் திடீரென தீப்பற்றிக் கொள்ளக்கூடும் என்பதால் சமையலுக்கு கூட நெருப்பை பற்றவைக்க முடியாமல் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளதாக குற்றம் சாட்டினர்.

Advertisment

இதனால், மூச்சுத்திணறல்ஏற்படுவதாகவும், வீடுகளில் எண்ணெய் பிசுக்குகள் ஒட்டியிருப்பதாகவும் மக்கள் வேதனையடைந்து வருகின்றனர். இதனையடுத்து, அங்கு படர்ந்துள்ள கச்சா எண்ணெயை முழுவதுமாக அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும், மழைநீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

இது குறித்து தகவல் அறிந்து திருவொற்றியூர் பகுதிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விரைந்து வந்து பார்வையிட்டார். இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்து இருப்பதை கண்டுள்ளோம். சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதனுக்கு தகவல் கூறியுள்ளோம். அங்கிருந்து அலுவலர்கள் வந்து பரிசோதனைக்காக தண்ணீர் மாதிரியை எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனைக்கு பிறகு எந்த தொழிற்சாலையில் இருந்து அந்த எண்ணெய் வந்தது என கண்டுபிடித்து கண்டிப்பாக அந்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இந்நிலையில், திருவொற்றியூர் பகுதியில் மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் உடல்நலம் பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் புகார் அளித்திருந்த நிலையில், தாமாக முன்வந்து பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இதனையடுத்து, இது தொடர்பான வழக்கில் இன்று பிற்பகல் அல்லது நாளை காலை பசுமைத் தீர்ப்பாயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.