அண்மையில் குழந்தை ஒன்று தாயால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அது ஒன்றரை மாதங்களுக்கு முன் நடந்தது என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கையில், அந்தப் பெண் விழுப்புரம் மாவட்டம் மோட்டூரைச் சேர்ந்த வடிவழகன் என்பவரது மனைவி துளசி என்பது தெரியவந்தது. வடிவழகனுக்கும் துளசிக்கும் இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி பிரச்சனை எழுந்ததால், துளசியை ஆந்திராவில் உள்ள அவரது தாயாரிடம் விட்டுவிட்டு திரும்பிய வடிவழகன், விழுப்புரத்தில் துளசியின் செல்ஃபோனை ஆராய்ந்தபோது அதிர்ந்துபோனார். ஒன்றரை வயதான மகனைக் கொடூரமாக தாக்கி, அதை பதிவும்செய்திருக்கிறார் துளசி. இதனால் ஆத்திரமடைந்த வடிவழகன், நேரே ஆந்திரா சென்று விவாகரத்து கோப்புகளில் கையெழுத்து வாங்கிவிட்டு திரும்பியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய வடிவழகன், “நடவடிக்கை சரியில்லை என்பதால் கொண்டுபோய் அவரது வீட்டில் விட்டுவிட்டேன். இங்கு வந்து செல்ஃபோனைப் பார்த்த பிறகுதான் குழந்தையை அடித்த விஷயம் தெரிந்தது. உடனே போய் தாலியை வாங்கிவிட்டு, கையெழுத்தும் வாங்கி வந்துவிட்டேன்” என்றார். மேலும், இதுகுறித்து வடிவழகனின் தந்தை கூறும்போது, “குழந்தை தற்போது நன்றாக இருக்கிறது. அவரோடு இருந்தவரைக்கும் தொல்லைதான். இவர் அடிக்கடி அடித்துக்கொண்டிருப்பார். எங்களுக்கு அது தெரியவில்லை.” என்றார்.
சிகிச்சைக்குப் பிறகு தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், தாய் துளசி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கவுள்ளது,