
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் வருகையின் போது பிரதமருக்கு உரிய முறையில் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு டிஜிபி சைலேந்திரபாபு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநரைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிரதமர் வந்த பொழுது அவரின் பாதுகாப்பிற்கு பயன்படும் உபகரணமான மெட்டல் டிடெக்டர் வேலை செய்யவில்லை. பழுதடைந்து இருந்தது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்த அவர், “பிரதமரின் வருகையின் போது குளறுபடி நடந்ததாக எந்தத் தகவலும் இல்லை. எல்லாம் நல்ல முறையில் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் காவலர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் சரிபார்க்கப்பட்டு, சரிசெய்யப்படும் பழக்கம் பல ஆண்டுகளாக உள்ளது. தமிழ்நாட்டில் தான் அதிகமான எண்ணிக்கையில் உபகரணங்கள் உள்ளது” எனக் கூறினார்.