Skip to main content

'எம்.எல்.ஏவை காணவில்லை...'- நெல்லையில் பரபரப்பை கொளுத்திய சுவர் அறிவிப்பு!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!


 

'வில்லுக்கு விஜயன். சொல்லுக்கு அர்ஜூனன்.
சொன்ன சொல்லைத் தவற மாட்டார் ரூபி.மனோகரன்.
அவரைக் காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்'
 -டி.ஐயப்பன்.

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் பேருந்து நிலையச் சுவரில் எழுதப்பட்ட இந்த வாசங்களும் அறிவிப்பும் நாங்குநேரி வாசிகளின் கவனத்தை ஈர்த்தது மட்டுமல்லாமல் பரபரப்பு நெருப்பையும் பற்ற வைத்திருக்கிறது. காரணம் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிற அந்த வாசகங்கள்தான். இந்தப் பக்கமே காணவில்லை என்று சொல்வது தேர்தல் முடிந்து எம்.எல்.ஏ.வாகப் பொறுப்பேற்று ஐந்தே மாதங்களான தொகுதி எம்.எல்.ஏ.வான காங்கிரசின் ரூபி.மனோகரனைத் தான்.

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!

 

மிகக்குறுகிய காலத்திலேயே இந்த அளவுக்கு மக்களின் விமர்சனத்திற்குள்ளான நிலவரம் பற்றி அறியும் பொருட்டு சுவர் விளம்பர அறிவிப்பு செய்த தொகுதியின் மக்கள்நல ஆர்வலருமான சுப்பிரமணியன், ஐயப்பன் இருவரிடம் பேசிய போது, அவர்களோ, ''மானாவரிப்பகுதியான நாங்குநேரி தொகுதியில் விவசாயம் என்பது வானத்தையும் ஆற்று வழி நீரையும் நம்பிய பகுதி என்றாலும், சுதந்திரமடைந்து இவ்வளவு காலம் போன பின்பும் எந்த ஒரு தொழில் வளமுமில்லாத முன்னேற்றம் காணாத தொகுதியானதற்கு ஆதிமுதல் காரணமே 1989ல் தொகுதி சார்ந்த எம்.எல்.ஏ.வான ஆச்சியூர் மணிக்குப் பின்பு 32 வருட காலமாக எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் முதல் தற்போதைய எம்.எல்.ஏ. ரூபி மனோகரன் வரையிலானவர்கள் அனைவரும்  தொகுதி சாராத வெளியூரிலிருந்து இறக்குமதியான வேட்பாளர்களே. ஏனெனில் தொகுதி சார்ந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக இருந்திருப்பார்களோயானால் ஒரளவிற்கு மக்களின் கஷ்ட நஷ்டம் தெரியும், தொகுதியும் முன்னேற்றப்பாதைக்குப் போயிருக்கும். அதற்கான குடுப்பினை எங்களுக்குக் கிட்டவில்லையே. அதனால் தான் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 

தொகுதியின் கண் போன்றும் இருதயமுமான பகுதி நான்குநேரி. நகரம் மற்றும் சுற்றுப்பட்டிலுள்ள கிராமமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்வாதாரம், விவசாயம், இன்ன பிற வகைகளுக்காக நாங்குநேரிக்குத்தான் வரவேண்டும். மேலும், தேசிய நெடுஞ்சாலை வேறு நகரின் பக்கமாகவே செல்வது ஒரு அடையாளம் மட்டுமே.

 

மக்களின் நடமாட்டத்தால் வியாபாரமும், பிறதொழில்களும் நாங்குநேரியில் படுபிசியாக நடந்து வந்ததுடன் நகரவாசிகளின் வாழ்வாதாரமும், ஆரோக்யமாகவே இருந்து வந்தது. ஏனெனில் தேசிய நெடுஞ்சாலை வழியாகப் பறக்கிற அனைத்து பேருந்துகளுமே நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்கிற காலம் என்பதால்தான் அத்தனை புழக்கங்களும் ஏற்பட்டதற்கான முக்கிய வகைகளில் ஒன்று.

 

யார் கண்பட்டதோ, வாங்கிய சாபமோ, வரமோ தெரியவில்லை. 1982ன் நகரின் பக்கமாக பைபாஸ் சாலை போடப்பட்டதால், தெற்கேயும் வடக்கேயும் செல்லும் பேருந்துகள் ஊருக்குள் வராமல் நெடுஞ்சாலையிலேயே பறக்கத் தொடங்கிவிட்டன.

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!

 

1985க்குப் பின் நாங்குநேரி ஊருக்குள் வந்துசெல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து காலப் போக்கில் மிகவும் சுருங்கிவிட்டன. அதுவும் பகல் இரவு என்று நாள் முழுக்க பரபரப்பாக வந்துபோன பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துபோய் விரல் விட்டு எண்ணுகிற அளவுக்கு அக்கம்பக்கக் கிராமங்களுக்காகச் செல்லுகிற நான்கு நகரப் பேருந்துகள் மட்டுமே ஊருக்குள் வந்து செல்லும்படியாகிவிட்டது.

 

ஒருநகரின் முன்னேற்றத்தின் அச்சாணியே போக்குவரத்துதான். இங்கே அந்த அச்சாணியே உடைந்துபோய் விட்டது. போக்குவரத்து இல்லாததால் ஜனப் புழக்கம் ரொம்ப குறைந்துவிட்டது. நகர மற்றும் வெளிப்பகுதி மக்கள் ரொம்ப சிரமப்படுறாக. மட்டுமல்ல நகரின் அனைத்து வியாபாரமும் விவசாய தொழிலும் முடங்கிப் போனதுடன், கடைகள் காற்றுவாங்குகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதுல குடிதண்ணீர் பிரச்சணை வேற. பேருந்துகளில் நாங்குநேரி செல்ல வேண்டும் என்று வருகிற மக்களைப், பயணிகளை பேருந்துகளில் ஏறுவதற்கு மறுக்கப்படுகிறார்கள். வெறுப்பாக அவர்களைப் பார்க்கிறார்கள். வெறுப்பில் அவர்களை ஏற்றுவதே இல்லை அப்படியே ஏற்றினாலும் ஊருக்குள் வராமல் பைபாஸ் காட்டுப் புறத்திலேயே இறக்கி விடுகிறார்கள். கேட்க நாதியத்துப் போனோம். அங்கிருந்து மக்கள் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் நடந்து ஊர் வரவேண்டும். அதுவே தான் இரவிலும் .பெண் பிள்ளைகளின் கதி என்னவாகும். பயம்வேற. யோசிச்சிப்பாருங்க.

 

அதனால் தான் ஆண்டாண்டு காலம் அனுபவிக்கிற இந்த இம்சைக்கு முடிவுகட்ட பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும்ணு ஊரே திரண்டு மறியல், சாலையில் போராட்டம் நடத்தினோம். வழி வழியாய் வந்த எம்.எல்.ஏ.க்கள் கலெக்ட்டர்கள், போக்குவரத்து நிர்வாகம் என்று பலரிடமும் மனுக் கொடுத்தோம் பலனில்லை. கவனிப்பாரில்ல. எம்.எல்.ஏ. ரூபி.மனோகரனிடம் மனு கொடுத்தோம் அவரும் கவனிக்கல்ல. அதனால் தான் ஊர் சார்பா இப்புடி சுவர்ல எழுதுனோம்'' என்றார்கள் வேதனை மண்டிய குரலில்.

 

'Missing MLAs ...' - Nellai announcement that ignited a commotion!

 

இது குறித்து நாம் எம்.எல்.ஏ.வான ரூபி.மனோகரனிடம் பேசியதில்,

 

''நான் எங்கேயும் போகல. ரெண்டு வருஷமா தொகுதியில தான் சுத்திக்கிட்டுவர்றேன். எத்தனையோ நிவாரணங்களைச் செய்திருக்கேன். நகரின் நிலைமைகளை நான் அறிந்தவன்தான். பேருந்து பிரச்சினைக்கு தீர்வு காண நிர்வாகத்துடன் பேசியுள்ளேன். இப்போது ஒடுற பேருந்துகளின் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஊருக்குள் வராமல் அவர்களின் இஷ்டப்படி, அவர்களின் வசதிக்காக மக்களை சாலையில் இறக்கி விட்டு விடுகிறார்கள். நிச்சயம் இதற்கு தீர்வு காண்பேன்'' என்றார்.

 

நாங்குநேரி நகரம் ஒளிருமா. நாலாபக்கமும் அதன் ஒளி படருமா என்ற ஏக்கம் தெறிக்கிறது ஒட்டு மொத்த நகரத்திலும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.