Skip to main content

காணாமல் போன விவசாயி! 17 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு! 

Published on 08/04/2022 | Edited on 08/04/2022

 

Missing farmer! Find the corpse in a decomposing state after 17 days!

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ரமாமணி(50). இவர், கடந்த 20ஆம் தேதி இரவு நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் ரமாமணியை தேடிப் பார்த்த அவரது மனைவியும் உறவினர்களும் அவர் கிடைக்காததால் அவரது மனைவி, அனந்தபுரம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணாதது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்தநிலையில் நேற்று காலை துத்துப்பட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக வனப் பகுதிக்கு ஆடு மாடு மேய்க்க சென்றவர்கள் அனந்தபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து வனப் புதரில் சிக்கியிருந்த அந்த உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 


போலீசாரின் விசாரணையில் இறந்து கிடந்தது 17 நாட்களுக்கு முன் காணாமல் போன விவசாயி ரமாமணி என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், காட்டுப் பகுதியில் சுற்றி வரும் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக அதே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(56), பெருமாள்(68) ஆகிய 2 பேரையும் போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர். 


போலீசாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் காட்டுப்பன்றி வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின்சார வேலியில் ரமணி சிக்கி இறந்து போனதாகவும் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இருவரும் ரமாமணியின் உடலை வனப்பகுதியில் கொண்டு சென்று வீசி விட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதுதொடர்பாக அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்