/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1-Recovered_209.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி பார்வதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் வசித்து வந்த அஜித்(19) எனபவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெண்ணின் பெற்றோருக்கு தெரியவர, அஜித்தை அழைத்து, மாணவிக்கு வயது குறைவாக இருக்கிறது. திருமணம் செய்துகொள்வது குறித்து பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை(6.3.2024) பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த மாணவி இரவு வீட்டில் இருந்து காணாமல் போய் உள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். மாணவி எங்கு தேடியும் கிடைக்காததால் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவி குறித்து தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று(8.3.2024) காலை மாணவி, தனது காதலன் அஜித்துடன் விஷமருந்திவிட்டதாகவும் தற்போது பேசமுடியாத நிலையில் இருவரும் காப்பு காடு குமரிகுட்டு மலைப்பகுதியில் இருப்பதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளனர். உடனடியாக பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மலைப்பகுதிக்கு சென்று பார்த்தபோது, மாணவி மற்றும் அஜித் இருவரும் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த புத்தாநத்தம் போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் அஜித்தின் செல்போனை பார்த்தபோது, அதில் மாணவி மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படமும், அந்த புகைப்படத்தில் மாணவியின் கழுத்தில் தாலி உள்ளது. தற்கொலைக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டு பின்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)