/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1293.jpg)
வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம், கே.சி.வீரமணி ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, ஆயிரத்து 91 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார் கே.சி. வீரமணி.
இந்நிலையில், வேட்புமனுவிலும்பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி. வீரமணிக்கு எதிராக குற்றம்சாட்டி, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, தனது வேட்புமனுவில் தவறான பான் நம்பரை குறிப்பிட்டிருந்ததாகவும், அவரது சொத்து விவரங்கள், வருமானவரி கணக்குடன் ஒத்துப்போகவில்லை எனவும் தவறான தகவல்களைத் தெரிவித்த அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, மனுதாரரின் புகார் மனுவை முடித்துவைத்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், 1966ஆம் ஆண்டுக்கு முன், வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையமே புகார் அளித்துவந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக யார் வேண்டுமானாலும் குற்ற நடவடிக்கை எடுக்க வகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி ஆகியோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)