sexual harassment of daughters by Father's in covai

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், தொழிலாளி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சிறுமிகள் படிக்கும் பள்ளியில் நேற்று முன் தினம் (12-10-23) கோவை மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது குழந்தைகள் நல அமைப்பு அதிகாரிகள், பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்தும், தீயவர்களிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது எப்படி? என்பது குறித்தும் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள், மாணவிகளிடம் யாராவது பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தால் தைரியமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

Advertisment

அப்போது, தொழிலாளியின் இரண்டு மகள்களும் அழுதுகொண்டே அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், தங்களது தந்தை கடந்த ஓர் ஆண்டாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கு இந்த சம்பவம் குறித்து சிறுமிகளின் தாயிடம் எடுத்துக் கூறினர். இந்த தகவலை கேட்ட தாயும் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, சிறுமிகளின் தாய் கோவை மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமிகளின் தந்தையை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து நடத்திய விசாரணையில், தனது இரண்டு மகள்களையும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், இதனை வெளியே கூறினால்சிறுமிகளை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததுள்ளார் என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அவரை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.