
கிருஷ்ணகிரி அருகே, அரசு ஒதுக்கிய நிதியை தவறாக கையாண்டதாகவும் ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கியதில் முறைகேடுகள் செய்ததாகவும் வந்த புகாரின் பேரில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவரின் காசோலை அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி (38). கிருஷ்ணகிரி நகரையொட்டி அமைந்துள்ள இந்த ஊராட்சியில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய ஊராட்சியான இங்கு 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி, அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் உரிமம் புதுப்பிக்காத ஒப்பந்ததாரர்களுக்கு அரசுப்பணிகளை ஒப்பந்தம் கொடுத்ததாகவும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் சென்றன.
அதன்பேரில், கட்டிகானப்பள்ளி ஊராட்சிமன்றத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அதில், அந்த ஊராட்சியில் அரசு நிதி தவறாக கையாளப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஊராட்சிமன்றத் தலைவர் காயத்ரியிடம் இருந்து காசோலை அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். மேலும், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (மண்டலம் 3) ஆகியோரிடம் வழங்கி உத்தரவிடப்பட்டு உள்ளது.