திருவள்ளூர் மாவட்டம் ஆரப்பாக்கத்தில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். சுமார் 13 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு நேற்று (25.07.2025) மாலை 4 மணி அளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சூளுர்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். 

இவர் மீது போச்சோ, குழந்தையைக் கடத்துதல், கடுமையான ஆயுதங்களை வைத்துத் தாக்குதல் மிரட்டுதல் மற்றும் உடலுக்குத் தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கவரப்பேட்டைக் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் 15 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது அவர் தனது அடையாளத்தை மாற்றி மாற்றிச் சொல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொடர்ச்சியாக ரயிலில் பயணிக்கக்கூடிய வழக்கம் உடையவராக உள்ளார். அதன் அடிப்படையில் தான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

அதோடு இவர் தொடர்ச்சியாகச் சனி மற்றும்  ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில்களில் பயணித்து பல்வேறு இடங்களுக்குப் பயணிக்கக்கூடியவராக உள்ளார். அதே சமயம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தாபா ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தாபாவின் பணி நேரம் முடிந்த பின் மின்சார ரயில் மூலம் பல்வேறு இடங்களுக்குப் பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த குற்றம் நடந்த சம்பவ நிகழ்ந்த இடத்திலிருந்து தொடர்ச்சியாக 75 சி.சி.டி.வி. கேமராக்களின் காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் அதன் அடிப்படையில் குற்றவாளியைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்படுதற்காக மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.