Advertisment

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; கைதானவரிடம் விடிய விடிய விசாரணை!

arambakkam-acc-child

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது இளைஞர் ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகியிருந்தது. 

Advertisment

இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 14 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க முடியாமல் திணறினர். அதோடு ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை மார்காமாக வருகின்ற ரயில்களில் பயணிப்போரிடமும் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர். இத்தகைய சூழலில் தான் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் போன்ற உருவ ஒற்றுமை மற்றும் உடை ஒற்றுமை உடைய நபரை பிடித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு  அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட ஒரே உருவ ஒற்றுமை இருப்பதால் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த அந்த நபரிடம் தீவிர விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டார். சிறுமியும் இதனை உறுதி செய்த நிலையில் அந்த நபர்தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இதனையடுத்து அந்த நபர் குறித்த தகவல்கள் வெளியாகி இருந்தது. அதில் மேற்குவங்கத்தை சேர்ந்த அந்த நபர் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபாவில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. கஞ்சா போதைக்கு அடிமையான அந்த நபரை தாபா நிர்வாகம் பலமுறை பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் ஊர் சுற்றுவதை இந்த நபர் வாடிக்கையாக கொண்டிருந்ததும், வழக்கம் போல கடந்த 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஊர் சுற்றச் சென்ற அந்த நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவரிடம் 12 மணி நேரத்திற்கு மேலாக விடிய விடியத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைதான வடமாநில இளைஞர் வேலை பார்த்த சூலூர்பேட்டை தாபாவின் உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த விசாரணையில் இந்த நபர் எப்படி இங்கு வேலைக்குச் சேர்ந்தார்?. அவர் எப்போது வேலைக்குச் சேர்ந்தார்?. அவர் எப்போதெல்லாம் விடுப்பு எடுத்திருக்கிறார்?. இந்த சம்பவம் நடந்த அன்று இவர் எங்கே சென்றார்? என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே சமயம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது குற்றவாளியைக் காண்பிக்க வேண்டும் எனச் சிறுமியின் உறவினர்களும், கிராம மக்களும் ஆரப்பாக்கம் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த விசாரணையைத் தொடர்ந்து அடுத்த கட்டமாகக் கைது செய்யப்பட்டவரைக் காலை 10 மணிக்கு மேல் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

girl child police Investigation POCSO thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe