Skip to main content

விமான பயணத்திற்காக ரூ.66 லட்சம் செலவு செய்த அமைச்சர்கள்!

Published on 18/05/2018 | Edited on 18/05/2018
spice jet


புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உட்பட அரசில் அங்கம் வகித்து வரும் அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக முதல்வர் நாராயணசாமி வாரம் ஒரு முறை டெல்லி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். முதல்வரும், சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவும் பாதி நாட்களை விமானத்திலேயே கழிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு புதுச்சேரியில் பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு பெறப்பட்டது. அதில் கடந்த 1.8.2016 முதல் 31.12.2017 வரை 16 மாத காலத்திற்கு ரூ.66,52,666 விமான பயணங்களுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் சுற்றுலாத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தன் துறையின் பெயருக்கு ஏற்றார் போல 16 மாத காலத்தில் அதிகபட்சமாக 163 முறை விமானப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.13,99,143 செலவு செய்யப்பட்டுள்ளது. விமானப் பயணத்தில் முதலமைச்சர் நாராயணசாமியையே முந்தியுள்ளார் மல்லாடி. இவர் புதுச்சேரி மாநிலத்தில் இருப்பதை விட விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, ஹைதராபாத், டெல்லி என மற்ற மாநிலங்களில் சுற்றுலாவில் இருப்பதுதான் அதிகம் என புதுச்சேரி வாசிகள் நீண்ட நாட்களாக புகார் கூறுகின்றனர்.

முதல்வர் நாராயணசாமி 120 முறை விமான பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.22,55,155 செலவு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் 40 முறை விமான பயணம் செய்ததற்காக ரூபாய் 4,32,875, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி 30 முறை விமான பயணம் செய்ததற்கு ரூபாய் 9,73,913_ம், வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜஹான் 26 முறை பயணம் செய்ததற்காக ரூ.8,54,144ம், வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் 20 முறை விமான பயணத்திற்காக ரூபாய் 2,29,793_ம், அரசு கொறடா அனந்தராமன் 2 முறை விமான பயணம் செய்ததற்காக ரூ.26,434ம் செலவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் அமைச்சர்களுக்கு நிகராக 35 முறை விமான பயணம் செய்ததற்காக ரூ.2,76,516 செலவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லஷ்மி நாராயணன் 21 முறை விமான பயணத்திற்காக ரூ.2,04,784ம், அரசு கொறடா அனந்தராமன் 2 முறை விமான பயணம் செய்ததற்காக ரூ.26,434_ம் செலவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகள் 457 முறை விமான பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் புகார் செய்துள்ளார். அதன்பேரில் அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகளின் விமான பயணங்கள் அரசு முறை பயணங்கள் தானா அல்லது சொந்த பயணங்களா? பயணத்திற்கான செலவிடப்பட்ட தொகை முறையாக செலவிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுபற்றி ரகுபதி நம்மிடம் கூறுகையில், ”புதுச்சேரி அரசு நிதி நிலைமை மோசமாக உள்ள நிலையில் கடந்த 16 மாத காலத்தில் அமைச்சர்கள், அரசு பிரதிநிதிகளின் விமான பயணங்களுக்காக 66 ஆறரை லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் எடுத்துள்ளோம். கவர்னரிடமும் புகார் அளித்துள்ளோம். உரிய பதில் கிடைக்கும், நடவடிக்கை இருக்கும்” என்கிறார்.

சார்ந்த செய்திகள்