Ministers who have received petitions under the Chief Minister with People scheme

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை நேற்று முன்தினம்தொடங்கி வைத்தார். இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, திருச்சி மாநகராட்சி மண்டலம்-1 ஸ்ரீரங்கம் தேவி அரங்கம், எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபம், லால்குடி ஊராட்சி ஒன்றியம் தாளக்குடி ஏ.பி.எஸ். மஹால் ஆகிய இடங்களில் முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதே போல், பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட பொத்தமேட்டுப்பட்டி மாதா மக்கள் மன்றத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ முகாமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிப் பகுதிகளில் 19 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 22 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 13 இடங்களிலும், ஊரகப் பகுதிகளில் 26 இடங்களிலும் என மொத்தம் 80 இடங்களில் நேற்று முதல் வரும் 2024 ஜனவரி 5 -ஆம் தேதி வரையிலும் இந்த முகாம் நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை பெற்றுத் தீா்வு காண்பதற்கு தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முகாம்களில் பெறப்படும் மனுக்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமார். எம்எல்ஏக்கள் அ. சௌந்தரபாண்டியன், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சி. கதிரவன், பி.அப்துல் சமது, மாநகராட்சி ஆணையா் இரா.வைத்திநாதன், நகர பொறியாளா் சிவபாதம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.