Skip to main content

மாப்பிள்ளையாக இருக்க அமைச்சர் சொன்ன டிப்ஸ்; கலகலப்பான பேரவை

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

Minister's tips for being a groom; A lively assembly

 

2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டு முதல் வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக அடுத்த நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

 

பச்சைநிறத்துண்டு அணிந்து பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்ந்து வாசித்து கொண்டு இருக்கும் போது, “தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களான சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, பித்தளை சம்பா, தங்க சம்பா ஆகியவற்றை பாதுகாத்து பரவலாக்கிட நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் 2021- 2022 ஆம் ஆண்டு 196 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டுள்ளது. 

 

அதேபோன்றே இவ்வாண்டும் அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். மேலும் பேசிய அமைச்சர், “மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையாக இருக்கலாம். தங்க சம்பா சாப்பிட்டால் தங்கமாக இருக்கலாம். இதெல்லாம் சாப்பிடனும் என்றார். இதற்கு உடனடியாக சபாநாயகர் அப்பாவு, “எல்லோருக்கும் கொடுங்க, சாப்பிடத் தயாராக உள்ளார்கள்” என்றார். சபாநாயகருக்கு பதில் அளித்த அமைச்சர், “அனைவருக்கும் கொடுக்கலாம்” எனக் கூற அவையே கலகலப்பானது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

வேளாண் பட்ஜெட்; இபிஎஸ் செய்யாததை முதல்வர் செய்தார்!

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

tn agri budget thanjavur thiruvarur nagapattinam farmres happy 

 

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் 3வது முறையாக தாக்கல் செய்யப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டின் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய் துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த பட்ஜெட்டில் டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், திருச்சி மாவட்டத்திற்கென பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதில் முக்கிய அறிவிப்பாக திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் கடந்த அதிமுக எடப்பாடி அரசால் தொடங்கப்பட்டு அதற்காக 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதோடு, அந்த திட்டத்தை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக திமுக அரசு அதை கையில் எடுக்காமல் தற்போது இந்த வேளாண் பட்ஜெட்டில் அந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கும் என்ற நோக்கில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்திருக்கலாம் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

அதேபோல் திருச்சி மாவட்டம் எண்ணெய் வித்து சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் 1500 ஹெக்டேர் எள் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பிரபல தனியார் நல்லெண்ணெய் நிறுவனம், லால்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எள்ளுக்கு நல்ல மவுசு இருப்பதால், இந்த பகுதியில் உள்ள எள்ளை மட்டுமே கொள்முதல் செய்வதில் அந்நிறுவனம் ஆர்வம் காட்டுகிறது. இவர்கள் காட்டிய ஆர்வம் தான், தற்போது வேளாண் பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம் தரும் எள் விதைகளை மட்டும் விவசாயிகள் உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

 

திருச்சி மாவட்டத்தில் பல அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களாக பணியாற்றி இருந்தாலும் ஒரு சில அதிகாரிகள் மட்டும் தான் துறையூர் பச்சைமலை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பான சில வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பச்சைமலை பகுதியில் வசித்து வரும் பழங்குடியினருக்கு தன்னுடைய முயற்சியால் அவர்களுக்கு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்கி உள்ளார். தற்போது அவருடைய சீரிய முயற்சியால் இந்த பட்ஜெட்டில் பச்சைமலை உள்ளிட்ட பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மலைகளில் வாழ்வாதாரம் மேம்பட பல்வேறு துறைகள் இணைந்து பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை பெருக்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

tn agri budget thanjavur thiruvarur nagapattinam farmres happy 

 

திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தோட்டக்கலைத்துறை பயிர்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் வேளாண்மைத்துறை பயிர்களும் உற்பத்தி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அங்குள்ளவர்களுக்கு உரிய பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த பகுதியில் அதிக அளவில் முந்திரி உற்பத்தி நடைபெறுவதால், முந்திரி பருப்பு மற்றும் முந்திரி எண்ணெய் எடுப்பதற்கான ஒரு ஆலை வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே செங்காந்தள் மலர் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் இதன் உற்பத்தியை அதிகரிக்க ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த மானியங்கள் மீண்டும் வழங்கப்பட்டால் இதன் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் முதல்முறையாக செங்காந்தள் மலர் உற்பத்தியை பெருக்க விதைகளை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம் வர்த்தகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குறைந்தபட்சமாக 36 ஹெக்டேர் வரை மட்டுமே பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட இந்த செங்காந்தள் மலர்கள் அரசின் விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

 

மேலும் தமிழகத்தில் தடுப்பணைகளை அதிகரிக்க எந்தவித திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்ற கோரிக்கை விவசாயிகளிடம் எழுந்துள்ளது. தடுப்பணைகளால் தான் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது. எனவே தடுப்பணைகளை அதிகரித்தால் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் எல்லா காலத்திலும் தண்ணீர் கிடைக்கும். எனவே அரசு இந்த வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ள பெரும்பாலான திட்டங்கள் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இந்த திட்டங்களை அரசு முழுமையாக செயல்படுத்தினால் விவசாயிகள் பயனடைவார்கள்.

 

 

Next Story

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடாத தமிழக அரசை கண்டித்து இன்று (21.03.2023) தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.