Skip to main content

அமைச்சரின் பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களின் பாசன வசதிக்கான பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், இந்தத் திட்டத்தை கேரள அரசு தடுத்து நிறுத்தும் என்றும் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கேரள அமைச்சரின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.
 

 நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளமும், மறு பகுதியில் வறட்சியும் நிலவும் கொடுமை இந்தியாவில்  சாதாரணமான ஒன்றாகி விட்டது. இதற்கு முடிவு கட்டும் நோக்குடன் தான் நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தேசிய அளவில் இதற்காக பொதுவான செயல்திட்டம் தயாரிக்கப்படவில்லை என்ற போதிலும், மாநிலங்களிலும், மாநிலங்களுக்கு இடையிலும்  தேவையான, சாத்தியமுள்ள பகுதிகளில் நதிகள் இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தான் பம்பா-அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

ramadoss


 

கேரளத்தில் ஓடும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தில் ஓடும் வைப்பாற்றுடன் இணைத்து, அந்த ஆறுகளின் மிகை நீரை தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் பாசனத்திற்காக திருப்பி விடுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால்,  சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, திருவில்லிபுத்தூர்,  இராஜபாளையம்,  சாத்தூர்  தென்காசி ஆகிய வட்டங்களில் 91,400 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


 

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் கேரளாவிற்கு எந்த வகையிலும் பாதிப்போ, இழப்போ ஏற்படாது. ஏனெனில், ஏனெனில், பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 22 டி.எம்.சி, மட்டும் தான். இது  பம்பா, அச்சன்கோவில் ஆறுகளின் மொத்த உபரி நீரில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான். பம்பா - அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 110 டி.எம்.சி தண்ணீர் வீணாகும் நிலையில், அதில் 22 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு தருவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. அதேநேரத்தில் இந்த தண்ணீர் தமிழகத்தில் ஒரு லட்சம் உழவர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும்.
 

அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் கேரளத்திற்கு 500 மெகாவாட் மின்சாரம்  கிடைக்கும். பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற நிலையில், அந்தத் திட்டத்தை செயல்படுத்தி பயனடைவது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். அதற்கு மாறாக, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் கேரள அரசு எதை சாதிக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்த தேசிய நீர் மேம்பாட்டு முகமை இந்த இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த  முடியும் என்றும் கூறியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கும் போதிலும், கேரள அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி பிடிவாதம் பிடிக்கிறது.


 

பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை எதிர்ப்பதற்காக கேரளம் கூறும் காரணங்கள்  நியாயமற்றவை; தர்க்கமற்றவை. பம்பா, அச்சன்கோவில் உள்ளிட்ட கேரளத்தில் ஓடும் 6 ஆறுகளின் நீரோட்டம் 2051-ஆண்டு வாக்கில் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்பதற்காகவே இத்திட்டத்தை எதிர்ப்பதாக கேரளம் கூறுகிறது. இதற்கெல்லாம் மேலாக கேரள ஆறுகளின் தண்ணீர்  தமிழ்நாட்டுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என கடந்த 20 ஆண்டுகளாகவே கேரள அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான சுயநலம் என்பதைத் தவிர வேறில்லை.
 

கேரளத்தின் தேவைக்கான காய்கறிகள், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன. கேரளம் அதன் பெரும்பான்மையான தேவைகளுக்கு தமிழகத்தை சார்ந்து தான் இருக்க வேண்டும். அதனால், தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களும்  ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது தான் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும். இந்த உண்மையை உணர்ந்து  பம்பா- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கான எதிர்ப்பை கேரள அரசு கைவிட வேண்டும்; இத்திட்டத்திற்கான ஒப்புதலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.