Minister who inspected the opening of temples closed by Corona.

Advertisment

கரோனா பரவலால் மக்களைப் பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. சுமார் 165 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1 -ஆம்தேதி முதல் அனைத்து கோயில்களும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. கோவில்கள் திறக்கப்பட்டாலும் பக்தர்கள், கோவில் நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பக்தர்கள் முகக் கவசம் அணிந்து வருவது கட்டாயம், கைகழுவுதல், அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதம் ( குங்குமம், திருநீறு ) போன்றவைகளை கைகளால் எடுத்துத் தரக்கூடாது, பக்தர்கள் தேங்காய், பழம் வாங்கிச் சென்று அர்ச்சனை செய்யக்கூடாது, சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பனபோன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு ஆன்லைன் வழியாகவும் தரிசன டிக்கட் பெற்று தரிசனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உடன் இருந்தார்.

Advertisment

அண்ணாமலையார் கோவிலில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு மதிய நேரத்தில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவில் மூடப்பட்டதால் அன்னதானம் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கோவில் திறக்கப்பட்டதோடு, பக்தர்களுக்கு சாம்பார் சாதம், தயிர் சாதம் பார்சல் மூலம் உணவை வழங்குவதை தொடங்கியுள்ளனர். அதன்படி தரிசனம் முடிந்து வெளியே செல்லும் வழியில் வைத்து 400 பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்குகின்றனர், அதனை ஆய்வு செய்தார்.

Ad

கோவில் பகுதி முழுவதும் சுற்றிவந்து தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளதா, பக்தர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறார்களா, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறதா, அதற்கான ஊழியர்கள் யார், யார் என்பனவற்றை கேட்டு தெரிந்துகொண்டு பக்தர்களுக்குச் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்திச் சென்றார்.