Minister who gave the relief amount to major jeyanth family

அருணாச்சலப்பிரதேசம் மேற்கு கமெங் மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் "சீட்டா" வகை ஹெலிகாப்டர் ஒன்று சாங் கிராமத்தில் இருந்து புறப்பட்டது. இதில் ஒரு ராணுவ மேஜர் மற்றும் லெப்டினட் அதிகாரி இருவரும் விமானிகள் ஆக ஹெலிகாப்டரை இயக்கி சென்றுள்ளனர். காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15 மணிக்கு கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு மையத்துடனானதொடர்பைஇழந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அதனையடுத்து அருணாச்சலப்பிரதேசம் மேற்கு பூண்டிலா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இதன்பின் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு ராணுவ அதிகாரிகளும் உடல் கருகி இறந்ததாகவும் தகவல்கள் வெளியானது.

Advertisment

அருணாச்சலப்பிரதேசத்தில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், விபத்தில் பலியான இரண்டு ராணுவ அதிகாரிகளான லெப்டினன்ட் வி.வி.பி. ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் இவர்களில் ஜெயந்த் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ஜெயமங்கலம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம், மல்லிகா தம்பதியினரின் மகனான மேஜர் ஜெயந்த்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு செல்லா சாராஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை.

இதனையடுத்து அவரது உடல் நேற்று நள்ளிரவு ராணுவ விமானத்தின் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு அங்கிருந்து இன்று காலை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலைப் பார்த்ததும் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். தமிழக அரசு சார்பாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேரடியாகச் சென்று ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதுபோல் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சஜீவனா, தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமானதங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மேலும் தமிழக அரசு அறிவித்த ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையும் ஜெயந்த் மனைவி செல்லா சாராஸ்ரீயிடம் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ராணுவ உயர் அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர், முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அதன் பின்னர் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் அவரது உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி ராணுவ முறைப்படி அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அவரது தந்தை ஆறுமுகம் தீ மூட்டினார். ராணுவ வீரர் மரணத்தால் ஜெயமங்கலம் கிராமமேசோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.