
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை ஒன்றியம் சம்மட்டிவிடுதி ஊராட்சி மேலவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 26) என்ற இளைஞர் இரு கால்களையும் இழந்து தவித்து வரும் நிலையில், அவரது மனைவி விமலா, அவருக்கு துணையாக இருந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.
கழிவறை வசதிகூட இல்லாத குடிசை வீட்டில் வசிக்கும் ராஜாவின் இயற்கை உபாதைகளை மனைவி விமலாவே எடுத்து வருகிறார் என்பதை மக்கள் பாதை மூலம் அறிந்து நக்கீரன் களத்திற்கே சென்று செய்தி மற்றும் வீடியோ வெளியிட்டதுடன் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.
உடனடியாக அவருக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் சில நாட்களில் ராஜாவின் வீட்டிற்கே சென்று வீட்டுமனைப் பட்டா வழங்கியதுடன் மேலும் உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார் ஆட்சியர் உமாமகேஸ்வரி. மேலும் கால்களை இழந்த கணவரை 4 வருடமாக கவணித்துக் கொள்ளும் மனைவி விமலாவுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.
இந்த நிலையில் நக்கீரன் செய்தி மூலம் தகவல் அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு விழாவுக்கு சென்றபோது, நேரடியாக ராஜாவைப் பார்த்து உதவிகள் செய்வதாக உறுதி அளித்திருந்தார். அதேபோல இன்று புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ராஜாவை அழைத்து ரூ. 2.10 லட்சம் மதிப்பிலான பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். நக்கீரன் வெளிக்காட்டிய ராஜாவுக்கு அரசு உதவிகளோடு பல தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், தொண்டு நாறுவனங்களும் உதவிகள் செய்து வருகின்றனர். அனைவருக்கும் ராஜா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்.