
திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்டம், வடக்கு, தெற்கு மாவட்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்புக்கு மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்த உள்ளார்.
இதற்காக இன்று மதியம் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "விளையாட்டுத் துறை சார்பில் தமிழ்நாட்டின் முதல்வரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம். முதலமைச்சர் கோப்பைக்கான 15 வகையான விளையாட்டு போட்டிகள் எல்லா மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை வழங்குவார். ஆஸ்கர் விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர்கள் அன்பழகன் (திருச்சி), சண். ராமநாதன்(தஞ்சை), எம்.எல்.ஏக்கள் காடுவெட்டி தியாகராஜன், திருவையாறு துரை. சந்திரசேகரன் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.