Advertisment

அயலகத் தமிழர் தின விழாவைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Minister Udhayanidhi Stalin inaugurated the Tamil Nadu Day celebrations

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக 'தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடத்திவருகிறது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (ஜனவரி 11) மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அயல்நாடுகளில் வாழும் 1400க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்பதற்குப் பதிவுகள் செய்துள்ளனர். இதில், 218 சர்வதேசத் தமிழ்ச் சங்கங்கள் 48 பிற மாநிலத் தமிழ்ச் சங்கங்களைச்சேர்ந்த அயலகத் தமிழர்கள் இந்த இரண்டு நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.

Advertisment

அயலகத் தமிழர் தின விழாவின் முதல் நாளான இன்று, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றினார். இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. மஸ்தான் முன்னிலை வகிக்கிறார். அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி வரவேற்புரை ஆற்றினார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisment

இரண்டாம் நாளான நாளை (12.01.2024) தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் விழாப் பேருரை நிகழ்த்துவதுடன் ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம் அவர்கள் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் விழாவின் முக்கிய நிகழ்வாக 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe