முன்கூட்டியே துண்டு போடும் நிர்வாகிகள்; மேடையிலேயே கலாய்த்த அமைச்சர் உதயநிதி!

Minister Udhayanidhi spoke to administrators about   Deputy Chief Minister

திமுக இளைஞரணி 45வது ஆண்டு விழா இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி தலைமையில் தேனாம்பேட்டையில் நடந்தது. இதில் இளைஞரணி முக்கிய நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

அவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி, “மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவிற்குப் பதிலடி கொடுத்துள்ளனர். அரசியல் களத்தில் எப்படி மக்களைச் சந்தித்துப் பேசுகிறோமோ அதேபோன்று இன்றைய காலத்தில் சமூக வலைத்தளமும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பொய்யையே பேசி, பொய்யையே பரப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை நாம் அம்பலப்படுத்த வேண்டும். அதனால் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருங்கள்.

காலையில் எழுந்தவுடன் முரசொலியைத் தவறாமல் படித்துவிடுங்கள். முதல்வரின் அறிக்கைகள், அரசின் திட்டங்கள் என்னுடைய அறிக்கைகள், என அனைத்தையும் படித்துவிடுங்கள். முரசொலியில் தினமும் ஒரு பக்கத்தை இளைஞர் அணிக்கென்று ஒதுக்கி அதில் கருத்துகளை வெளியிட்டு வருகிறோம். முதல்வர் 234 தொகுதிகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதனையேற்று முதற்கட்டமாக 50 தொகுதிகளிலும் நூலகத்தைத் திறந்துள்ளோம். மிதமுள்ள தொகுதிகளிலும் விரைவில் நூலகம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கும், மக்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழ்நாடு முழுவதும் பேச்சு போட்டி நடத்தி 100 சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து தலைமையிடத்தில் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டிருந்தார். அதன்படி அதற்கான பணிகளையும் தற்போது தொடங்கியிருக்கிறோம். இதற்காக 30 நடுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அனைத்து மாவட்டத்திற்கு அனுப்பி வைத்து பேச்சாளர்களைத் தேர்வு செய்யவுள்ளோம்.

இந்த மேடையில் அனைவரும் பேசி நான் துணை முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் எல்லாம் நிறைவேற்றினீர்கள். பத்திரிகையில் வரும் கிசுகிசுக்கள், வதந்திகள் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து இது நடக்கப்போகிறதோ என்று யூகத்தில் நாமும் ஒரு துண்டு போட்டு வைப்போம் என்ற அடிப்படையில் இங்கே பேசியுள்ளனர். இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் முதல்வரின் மனதிற்கு நெருக்கமான பொறுப்பு. நான் முன்பே கூறியதுபோல, எல்லா அமைச்சர்களுமே எங்களின் முதல்வருக்குத் துணையாகத்தான் இருப்போம் என்றேன். அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம்.

எனக்கு எவ்வளவு பெரிய பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு நெருக்கமானது இளைஞரணி செயலாளர் பொறுப்புதான். ஆகையால் எந்த பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன். நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கு உழைத்ததை போன்று வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் வெற்றிக்காக உழைப்போம். 2026 என்ன நடந்தாலும், எந்தக் கூட்டணி வந்தாலும் ஜெயிக்க போவதும் நம்முடைய கூட்டணிதான். அதைமட்டுமே இளைஞரணி தம்பிமார்கள் இலக்காக வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படியுங்கள்
Subscribe