
இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ளார். ஜூலை 16 ஆம் தேதி இரவு வேலூர் வந்து இரவு தங்கியிருந்தார். திடீரென இரவு 9 மணியளவில், வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மகப்பேறு பிரிவு, மகப்பேறு அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ரத்த வங்கி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளிடமும், பொது மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் விவரம், தாய்மார்கள், பச்சிளங்குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், பிரசவம் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக இரவு நேரங்களில் வரும் பொதுமக்கள் வருகிற போது விழிப்புடன் இருந்து சரியான முறையில் சிகிச்சையளிக்க வலியுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார், வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.