Minister Udayanidhi Stalin who helped the differently abled!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயல் மழையில் நான்கு மாவட்ட மக்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளும் இந்த புயல் மழையால் பெரும் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக மழை வெள்ளத்தில் அவர்களின் உதவி உபகரணங்கள் அடித்துச்செல்லப்பட்டன. அவர்களுக்கு தேவையான உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

Advertisment

இந்நிலையில், மாற்றுத்திறனாளியும் டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவருமான தீபான் நாதன் என்பவர் தனது சமூக வலைதள பக்கமான எக்ஸில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுங்கள் தோழர்களே! வெள்ள பாதிப்பில் எம் மாற்றுத்திறன் சகோதரர்களும் உள்ளனர்.. அமைப்புகள் கொஞ்சம் எங்களையும் பாருங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இதனைக் கண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவரின் உதவியாளர் மூலம், தீபக் நாதனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1000 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தீபக் நாதன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. சென்றவுடன், எழுந்து வந்து வரவேற்றார். ஆச்சர்யமாக இருந்தது. மாற்றுத்திறனாளிகள் வெள்ளத்தால் பாதித்திருப்பார்களே, விவரம் உண்டா என்றார் . ஆம், மளிகை சாமான்கள் உடனடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் முயற்சித்து வருகிறேன் என்றேன். உடனே எண்ணிக்கை விலாசம் கொடுங்கள் , மாலைக்குள் வரும் எனச் சொல்லி, அவரே கதவை திறந்து வழி அனுப்பினார்.

Advertisment

ஒன்றும் புரியவில்லை எல்லாம் பட படவென நடந்து விட்டது. இன்று 25 லட்சம் மதிப்புள்ள பொருள், எங்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்பட்டது. புதிய உபகரணங்கள் கேட்டிருந்தோம். அனைத்தும் வரும் என்றார். நான் அரசியல்வாதி தருகிறார் என்றால் , எங்களோடு புகைப்படம் எடுப்பார், பேசியது வீடியோவாக வரும் என்று நினைத்தேன். இது எதுவும் அவர் செய்யவில்லை. கொடுத்ததைக் கூட அவர் எங்கும் எழுதவில்லை. மாற்றுத்திறனாளிகளுடன் இந்நேரத்தில் நிற்கவேண்டும் என்று நினைத்து, அதை உடனே நிறைவேற்றிய அன்புக்கு நன்றி தோழர் உதயநிதி ஸ்டாலின். வேறு என்ன வடிவில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. வலது கை கொடுத்தது, இடது கைக்கு தெரியாத முறை என்பார்கள்! அப்படியே நிகழ்த்திவிட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.