Skip to main content

பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Minister Udayanidhi Stalin raised a series of questions to Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி நேற்றும் (31.03.2024) இன்றும் (01.04.2024)  எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தனது கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே, இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?. தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால், கஜா புயல், மிக்ஜாம் புயல்... என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்?.

2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?. இந்தியாவை 2020-ல் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்?. கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த ஐநூறு, ஆயிரத்தை பிடுங்கினீர்களே, கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்?. ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை சி.ஏ.ஜி. (C.A.G.) அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்?. அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019இல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?.

Minister Udayanidhi Stalin raised a series of questions to Prime Minister Modi

அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினீர்கள்?. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்ட பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்?. வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு?. நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?. பதில் சொல்லுங்கள் மோடி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.