Skip to main content

திமுகவை கிரிக்கெட் அணியாக சித்தரித்த அமைச்சர் உதயநிதி! பேரவையில் கலகலப்பு

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Minister Udayanidhi portrayed DMK as a cricket team!

 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகளும், விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை மற்றும் கைத்தறி துணிநூல் துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. 

 

இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டது. சேர சோழ பாண்டியர் காலத்திலிருந்து இங்கு தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வடக்கே இருந்து இங்கு வந்து யாரும் வென்ற வரலாறு கிடையாது. தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி ஒரு சிறப்பு உண்டு. இப்போதும் கூட யார் யாரோ தமிழ்நாட்டை வெல்ல நினைத்து அதற்கான முயற்சிகளை எல்லாம் செய்கிறார்கள். அவர்களின் விளையாட்டு இந்திய ஒன்றியத்தின் எந்த மாநிலத்தில் வேண்டுமானால் எடுபடலாம்; ஆனால், தமிழ்நாட்டில் என்றுமே எடுபடாது. அதற்கு காரணம் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள திமுக எனும் அணியும், அதன் கேப்டனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தான். 

 

அதோடு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் ஆகியோர் எங்கள் அணிக்கு கிடைத்துள்ள ஒப்பற்ற பயிற்சியாளர்கள் (கோச்சர்ஸ்). எந்த அணி எங்களுக்கு எதிரான அணி என்றும், யாருடன் எந்த நேரத்தில் நாங்கள் மோத வேண்டும் என்றும் எங்களுக்கு தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்துள்ளார். எப்படி ஒற்றுமையோடும், கடமை, கட்டுப்பாடு, கண்ணியத்தோடும் ஒரு அணி விளையாட வேண்டும் என பேரறிஞர் அண்ணா சொல்லிக் கொடுத்துள்ளார். எந்தப் பந்தை அடிக்க வேண்டும், எந்தப் பந்தை அடிக்கக்கூடாது என முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார். எப்போது பொறுமையாக டிஃபன்ஸ் ஆடவேண்டும். எப்போது முன்னேறிச் சென்று சிக்ஸர் அடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து வருகிறார் எங்கள் அணி தலைவரான முதல்வர். 

 

சொல்லிக் கொடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கச் செய்து நேற்று ஒரு சிக்ஸையும், டெல்டாவில் வரவிருந்த நிலக்கரி சுரங்கத்தையும் நிறுத்தி மற்றொரு சிக்ஸையும் அடித்துக் காட்டியுள்ளார்.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்