Advertisment

கல்லூரிகள், டைடல் பூங்கா, விமான நிலையம்; அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!

Minister Thangam Thennarasu announce New degree programs will be introduced in fields such as artificial intelligence

Advertisment

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (14-03-25) தாக்கல் செய்தார். இதில், அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை வெளியிட்டு உரையாற்றியதாவது, “சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.8500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உள்ள உயர்வாய்ப்பு குறித்து அனைத்து மாவட்டங்களில் விழிப்புணர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டிலேயே சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் முதல் 10 இடங்களில் அண்ணா பல்கலைக்கழகங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் புதிய பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்.

அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும். துறை ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க நிதியை உருவாக்கிட ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல், வேளாண்மை படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் பயிலும் மாணவர் கல்வி செலவை ஏற்க ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும். மாணவர்கள் அதிகம் விரும்பி சேரும் பாடப் பிரிவுகளில் 15,000 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். சென்னை, நீலகிரி, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் அமைக்கப்படும். 1 லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ரூ.100 கோடியில் புதிய அறிவியல் மையம் அமைக்கப்படும்.

சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து அறிவியல் மாநாட்டு கூடங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் சென்னை அறிவியல் மையம் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.சேலம், கடலூர், திருநெல்வேலியில் புதிய நூலகங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதை அதிகரிக்க ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். எவரெஸ் சிகரத்தில் ஏறும் தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். திறன்மிகு வகுப்பறை, நூலகம் கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.150 கோடியில் 10 புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். பள்ளி பாடத்தில் செஸ் போட்டிகளை சேர்க்கும் விதமாக உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படும். இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.578 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Advertisment

கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை அட்டை வழங்கப்படும். 1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 14 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் தடுப்பூசி போட ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ரூ.21,906 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தொற்றா நோய் தடுப்பில் தமிழ்நாடு அரசு ஐ.நா விருது பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 2023-24இல் 9.56 பில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகளவு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும். கோவை, பல்லடத்தில் செமி கண்டக்டர் தொழில் பூங்கா அமைக்கப்படும். 2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.

சென்னைக்கு அருகில் அதி நவீன தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும். கடலூர், புதுக்கோட்டையில் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும். விருதுநகரில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். திருச்சியில் பொறியியல் தொழில்பூங்கா அமைக்கப்படும். தென் மாவட்டங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். மதுரை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ.250 கோடியில் புதிய காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும். இந்த தொழிற்பூங்காக்கள் மூலம் புதிதாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 9 இடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் சிறு, குறு தொழில் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க ரூ.3,915 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

budget
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe