Minister Senthilpalaji giving 10 orders to Tasmac officials

தமிழ்நாடுமின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் மற்றும் சிறப்பு பறக்கும்படை அலுவலர்கள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்துவந்த அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கக்கூடிய பணிகளின் தன்மை குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கேட்டறிந்தார்.

Advertisment

அதன்பின் செந்தில்பாலாஜி, அதிகாரிகளுக்கு சில அறிவுரைகளைக் கூறியுள்ளார். அதில் பத்து கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் அனுமதிக்கப்பட்ட பணி நேரத்தில் மட்டுமே செயல்பட வேண்டும்.மதுபானங்கள் அனைத்தும் மதுபானக் கடைகளில் மட்டுமே விற்கப்பட வேண்டும். வெளி இடங்களில் விற்கப்படுகிறதா? என்பதனைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Advertisment

தற்போது பார்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. பார்கள் செயல்பட அரசால் அனுமதி வழங்கப்படும்வரை பார்கள் கண்டிப்பாக செயல்படக் கூடாது.மீறி பார் நடத்தினால் சம்மந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் கடைகளின் சுற்றுப்புறம் சுகாதாரமாகவும், கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் இயங்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியல் நுகர்வோரின் பார்வைக்குத் தெரியும் வண்ணம் வைக்கப்பட வேண்டும்.டாஸ்மாக் கடைகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு அருகில் அமையப்பெற்றிருந்தால், அதனைக் கண்டறிந்து உடனடியாக மாற்று இடம் தேர்வுசெய்து மாற்றம் செய்ய வேண்டும்.அரசுக்கு நற்பெயர் விளைவிக்கும் வகையில் அனைத்து அலுவலர்களும் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்திற்கு நற்பெயர் கிடைக்கும். டாஸ்மாக் கடைகளில் ஒரு கடைக்கு ஒரு நுழைவு வாயில் (Single Shutter) மட்டுமே அமையும் வகையில் இருக்க வேண்டும். கடையுடன் ஒட்டிய பார்கள் மற்றொரு நுழைவு வாயிலில் இருந்தால், அதனை மூடிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.வெளி மாநில மதுபான வகைகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், காவல்துறை மூலம் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்உள்ளிட்ட பத்து கட்டளைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் மிகச் சிறப்பாக செயல்பட முயல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.