Skip to main content

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை; மருத்துவர்கள் புதிய தகவல்

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

minister senthil balaji health update by doctor

 

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று அதிகாலை 5.15 மணியளவில் தொடங்கி சுமார் 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை காலை 10.15 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு பின்னரான வார்டுக்கு அவர் மாற்றப்பட்டார்.

 

இந்நிலையில் அமைச்சர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி வெண்டிலேட்டர் உதவியுடன் 24 மணி நேரம் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்திற்கு இதயத்திற்கு ஓய்வு தேவை என்பதால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்கத் தொடங்குவார். அறுவை சிகிச்சைக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. மேலும் வலி நிவாரணி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, இதயத் துடிப்பின் அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் வயிற்றிலிருந்து 5 கிலோ சினைப்பைக் கட்டி அகற்றம்; அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Removal of 5 kg sphincter tumor from female stomach; Achievement of Government Medical College Doctors

பெண்ணின் வயிற்றில் இருந்த 5 கிலோ சினைப்பைக் கட்டியை அகற்றி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராம பகுதியைச் சேர்ந்த வீரமணி மனைவி சசிகலா(38) வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து போது அவரது கருப்பையில் 22 செ.மீ நீள அகலத்தில் 5.1 கிலோ சினைப்பைக் கட்டி இருப்பது தெரிய வந்தது.

பின்னர் இது குறித்து அறுவை சிகிச்சைக்கான அனைத்து விதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணிற்கு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவர் வானதி தலைமையிலான மருத்துவ குழுவினர் திங்கள்கிழமை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பணம் செலவு இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 முறை வயிற்றில் மகப்பேறு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் மிகவும் சிக்கலான முறையில் 1 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கருப்பையில் இருந்த 5.1 கிலோ சினைப்பைக் கட்டியை  அகற்றி உள்ளார்கள். இதைத் தனியார் மருத்துவமனையில் செய்து இருந்தால் பல லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பெண்ணிற்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன் உள்ளிட்ட சக மருத்துவர்கள், மருத்துவ குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சசிகலா மற்றும் அவரது கணவர் கூலித்தொழிலாளி, இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கொதிக்கும் சாம்பாரில் விழுந்தும் தப்பிய சிறுவன்; உயிரைப் பறித்த அறுவை சிகிச்சை 

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
The boy who fell into the boiling sambar and escaped; Surgery that took life

கொதிக்கும் சாம்பாரில் தவறுதலாக விழுந்த சிறுவன் தழும்பு நீக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பெருங்களத்தூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவரது மகன் மதன்(3). செல்வம் வீட்டுக்கு அருகிலேயே உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி கடையில் விளையாடிக் கொண்டிருந்த மகன் மதன், ஹோட்டலில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் தவறுதலாக விழுந்துள்ளார். அலறித்துடித்த மதனின் குரலைக் கேட்ட கடை ஊழியர்கள் உடனடியாக மதனை காப்பாற்றினர். இதில் சிறுவனின் வலது கை வெந்து போனது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மதன் மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தான்.

தொடர்ந்து மதனின் கை பகுதியிலிருந்த தீக்காய தழும்புகளை சரி செய்ய வேண்டும் என பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுவனை பெற்றோர் அனுமதித்துள்ளனர். தீக்காய தழும்பு நீக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்கு 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், இதை ஒப்புக் கொண்ட பெற்றோர்  சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென சிகிச்சையின்போது சிறுவன் மதன் இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோர் தரப்பில் சங்கர் நகர் காவல் நிலையத்தில் மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. முறையான சிகிச்சை அளிக்காததால் மகன் இறந்து விட்டதாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இறந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கொதிக்கும் சாம்பாரில் விழுந்து பிழைத்த சிறுவன் அதனால் ஏற்பட்ட தீக்காய தழும்புகளை சரி செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.