Minister Senthil Balaji completes surgery doctors important information

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

Advertisment

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சிகிச்சை தொடங்கியது.செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இருந்து சரியாக 4.30 மணியளவில் அறுவை சிகிச்சை அரங்கிற்கு அவர் மாற்றப்பட்டதாகவும், அங்கு மயக்கவியல் நிபுணர்கள் முதலில் அவரை பரிசோதித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறுவை சிகிச்சைக்கு பின் மூன்று நாட்கள் தொடர் கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பார் என்றும் அடுத்த 7 நாட்களுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த பின் காவேரி மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில் சுமார் 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை காலை 10.15 மணிக்கு நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு பின்னரான வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அமைச்சர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பார் என மருத்துவமனைசார்பில தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.