/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/senthil_10.jpg)
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
அதேநேரம் செந்தில் பாலாஜி சட்டவிரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இருதரப்பு வாதங்களும் கடந்த 27 ஆம் தேதி நிறைவு பெற்றது.எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்புக்கான தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில் நீதிபதி நிஷா பானு, “அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம். அவர்கைது செய்யப்படும்போது சட்ட விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம்” என தீர்ப்பு வழங்கினார். நீதிபதி பரத சக்கரவர்த்தி செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்தமனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையைத்தொடரலாம். மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரையில் காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருக்கலாம் எனத்தெரிவித்துள்ளார். சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலில் இருக்கும் நாட்களாகக் கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். இதையடுத்து 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்ய வாய்ப்புள்ளதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் 3வது நீதிபதி வழங்கும் தீர்ப்பே பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதித்தீர்ப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)