முற்றுப்புள்ளி வைப்போம்; செல்வப்பெருந்தகையிடம் வருத்தம் தெரிவித்தார் அமைச்சர் சேகர்பாபு!

sekarbabu-selvaperunthagai

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள வல்லக்கோட்டை முருகன் கோவில் நேற்று (07.07.2025) குடமுழுக்கு நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்படும் இடத்திற்குச் செல்ல செல்வப்பருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது. அதே சமயம் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்குக் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இது தொடர்பாகக் குன்றத்தூரில் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பக்தி இயக்கம் செய்ததை விடப் பக்தி இயக்கம் கண்ட கனவை விடத் தமிழ்நாடு அரசு, அறநிலையத்துறை அமைச்சரால் ஆலயங்களில் வழிபாடுகளும் கும்பாபிஷேகங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 3000 கோவில்களுக்கு மேல் இதுவரை கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. 4000 கோடிக்கு மேல் சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன. நானே சாமி கும்பிட முடியவில்லை. அங்குச் சென்றபோது பத்தோடு பதினொன்றாக நின்னுட்டு அதிகாரிகள் ரொம்ப இர்ரெஸ்பான்சிபிலாதான் இருந்தார்கள். 

யாரையும் அங்கு வரவேற்பதற்கும் ஆட்கள் இல்லை. நாங்கள் கேட்பாறட்டு தான் கிடந்தோம். அதிகாரிகள் கும்பல் கும்பலாகச் சேர்ந்து கொண்டு அவர்கள் அவர்களை பாத்துக்கிட்டே தான் இருந்தார்களே தவிர எதற்காக எங்களை அழைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. அதிகாரிகள் தங்களுடைய மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான என்னால் கூட சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. 2000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலினின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக நின்று தரிசனம் செய்தேன்” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு செல்வபெருந்தகையிடம் அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வபெருந்தகை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று (08.07.2025) மாலை எனது இல்லத்தில் என்னைச் சந்தித்தார். நேற்று, திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வல்லக்கோட்டை முருகன் கோவிலில்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்ட அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து, வருத்தம் தெரிவித்தார்.

நடைபெற்ற சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதிகாரிகள் செய்த தவறுக்கு, அனைத்துத் தரப்பினரையும் சமமாக நடத்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நற்பெயருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாவுக்கும் இச்சம்பவம் குறித்து எந்தவித களங்கமும் ஏற்படுத்த வேண்டாம். மேலும், இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். இது குறித்து வருத்தம் தெரிவித்த ஜனநாயக சக்திகளுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

hrce minister sekar babu Selvaperunthagai sriperumputhur temple
இதையும் படியுங்கள்
Subscribe