ADVERTISEMENT

“மதுரை ஆதினத்திற்கு பதில் சொல்ல அவசியம் இல்லை..” - அமைச்சர் சேகர் பாபு 

03:06 PM Jun 06, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திங்கள் கிழமை காலை திடீர் என வருகை தந்தார். அவரை தீட்சிதர்கள் வரவேற்றனர். பின்னர் அவர், கோவில் கனகசபையில் (சிற்றம்பல மேடை) ஏறி நடராஜரை தரிசனம் செய்தார். பின்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பிறகு ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசினார். அப்போது தீட்சிதர்கள் கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது, கோயில் பூஜைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிற்கு விளக்கமளித்தனர். அப்போது கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் விளக்கம் அளித்தனர். அமைச்சர், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார். அதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் எனவும் கூறினார். எதையுமே தடுப்பதால் தான் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தீட்சிதர்கள் சம்பந்தப்பட்ட அவர்களது கோரிக்கையையும் அரசின் நிலைப்பாடும் பகிர்ந்து கொண்டோம். இந்து அறநிலையத்துறை சட்டதிட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக் கஷ்டமும் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அன்பான வேண்டுகோள். சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என எனக்கு தோன்றுகிறது. இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது. அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது.

மதுரை ஆதினம் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான், செய்திகளில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்பதற்காக அவர் சொல்லுகிறார். அவர் ஒருவர் மட்டும்தான் அப்படி சொல்கிறார். முன்தினம் கூட தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றிருந்தோம். அவர் நல்ல முறையில் உபசரித்தார். 26 ஆயிரம் மரக் கன்றுகள் நடக்கின்ற திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துவங்கி வைத்தார். அவர் கட்டிய இருபத்தி நான்கு அறைகளை என்னை கொண்டு திறக்க வைத்தார். யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதினங்களையும், ஜீயர்களையும் தீட்சிதர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. அனைவரும் தமிழக முதல்வரின் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆகவே ஏதோ ஒரு ஆதீனம் பேசுவதற்காக அதற்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் இல்லை” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT