
இன்று (18/6/2021) பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலை 10 மணியளவில் திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுசெய்த அவர், பள்ளியில் மாணவர்களுக்கு செயற்கை விண்ணப்பம் வழங்கி என்ன பாடப்பிரிவு வேண்டுமோ, அந்தப் பாடப்பிரிவு கிடைக்கிறதா; எவ்வளவு கட்டணம் என்பது போன்ற விவரங்களைக் கேட்டறிந்தார்.
தலைமையாசிரியரிடம், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதா; மாணவர்களுக்குப் பாடப் பிரிவு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படுகிறது, சுயநிதி பாடப் பிரிவுகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பன போன்ற விபரங்களைக் கேட்டறிந்தார். அதன் பின்னர், ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனரா என கேட்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அடுத்து திருச்சி மரக்கடை சையதுமுதர்ஷா மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கு மாணவர்கள் சேர்க்கை நடைமுறையைக் கேட்டறிந்தார். பள்ளியில் உள்கட்டமைப்பு, கழிவறை போன்றவற்றை நேரில் ஆய்வுசெய்தார். மேலும், அங்கு நடைபெற்ற தடுப்பூசி முகாமை ஆய்வுசெய்து அனைவரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தினார். அதன்பின்னர் திருச்சி ஏர்போர்ட் ஆபர்ட் மார்சல் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் சேர்க்கை குறித்தும் எத்தனை ஆசிரியர்கள் பணி செய்கின்றனர் என்பதையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.