Skip to main content

நொய்யல் ஆற்றில் சோப்புநீரால் நுரை வருவதாக கூறிய அமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் - விவசாயிகள்

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
நொய்யல் ஆற்றில் சோப்புநீரால் நுரை வருவதாக கூறிய அமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் - விவசாயிகள்

நொய்யல் ஆற்றில் நுரை வருதற்கு சோப்பு நீர்தான் காரணம் என்று கூறிய அமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும்  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா இராமசாமி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஊத்துக்குளி வட்டக்குழு சார்பில் அளித்த மனுவில், “ஊத்துக்குளி தாலுகா பகுதியில் நொய்யல் ஆறு செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஓடியபோது சாயப்பட்டறையாளர்கள் தேக்கி வைத்திருந்த சாயக்கழிவுநீரையும் அதில் கலந்தனர். இதனால் ஆற்றில் நுரை அதிகளவு ஏற்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன், பொதுமக்கள் சோப்பு போட்டு குளித்ததால்தான் ஆற்றுநீரில் நுரை ஏற்பட்டதாக கிண்டலாக பதில் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த பதிலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இதற்காக அமைச்சர் கருப்பணன்  விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்” என அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இதுபோல் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் நொய்யல் ஆற்றில் நுரை சென்றதற்கு சோப்புநீர் காரணம் என்ற விளக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் சோப்பு போட்டு குளித்தால் இவ்வளவு நுரை செல்லுமா? சோப்பு போட்டு யாரும் இனி குளிக்கக்கூடாதா? என்று விவசாயிகள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். மேலும் சாயக்கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதாக குற்றம் சாட்டியதுடன் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்