Skip to main content

'மலை மக்கள் வீடுதேடி வரும் மருத்துவம்..'- அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி!

Published on 05/08/2021 | Edited on 05/08/2021

 

Minister S. Muthusamy press meet

 

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் 5 ந் தேதி ‘மக்களை தேடி மருத்துவம்' என்ற திட்டத்தினை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

 

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்கிற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அவர் தொடங்கி வைக்க, தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட அமைச்சர்களும் அவரவர் மாவட்டத்தில் இத்திட்ட தொடக்க விழாக்களை நடத்தினார்கள்.

 

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர்.எஸ்.செல்வராஜ் மற்றும் அந்தியூர்; சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி இத் திட்டத்தினை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

 

"தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் தொடர்ந்து பல்வேறு மக்கள் நேரடியாக பயன் பெறும் திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு முன்பே திட்டமிட்டு என்னென்ன பணிகள் மக்களுக்காக செய்யப்பட வேண்டியிருக்கிறது, எதிலே குறைபாடு இருக்கிறது, எதில் தாமதம் ஏற்படுகிறது, மக்கள் எதில் சிரமப்படுகிறார்கள் என்பதையெல்லாம் உணர்ந்து, அதற்கென திட்டமிட்டு, பல்வேறு திட்டங்களை தேர்தலுக்கு முன்பே அறிவித்தார்கள். தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் அத்திட்டங்களோடு மேலும் பல திட்டங்களை இணைத்து அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டங்கள் என்ற தலைப்பில் பல்வேறு திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. 

 

அந்த வரிசையில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அலுவலர்களும், தாளவாடியில் இருக்கின்ற அரசு ஆரம்ப சுகாதார மையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் என்ற திட்டத்தை அரசிற்கு அனுப்பியுள்ளார்கள். இங்கு ஏற்கனவே 5 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்திட்டம் நிறைவேற்றப்படும் பொழுது மேலும் கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்படும். இங்கு உள்ள மலைவாழ் மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக கீழ் பகுதிக்கு இறங்கி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதனைத் தவிர்த்து, இங்கேயே ஆரம்ப சுகாதார மையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு மருத்துவமனையாக கொண்டுவரும் பட்சத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும். எனவே இத்திட்டத்தை நிறைவேற்றி வழங்க ஏதுவாக தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, விரைவில் இவை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

 

அதனைத் தொடர்ந்து  ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி வட்டாரத்தைச் சார்ந்த தொட்டகாஜனூர் துணை சுகாதார நிலையத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்" திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக தாளவாடி வட்டாரத்திலும் அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தாளவாடி வட்டாரத்தில் முதற்கட்டமாக 1,409 பயனாளிகள் பயன்பெறவுள்ளனர்.

 

மேலும், படுத்தபடுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு இயன்முறை மருத்துவம், நோய்த் தடுப்பு பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உடற்பயிற்சி சிகிச்சையாளர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. தொடர்ந்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாறுதல் ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளையும் மற்றும் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கப்பட்டுள்ளது" என்றார். 

 

 

இந்த நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சவுண்டம்மாள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வர் ஸ்டாலின் பேரைக் கேட்டாலே பாஜகவுக்கு அதிருதில்ல” - அமைச்சர் மெய்யநாதன்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரத்திற்கு ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சர் மெய்யநாதன், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளமங்கலம், பனங்குளம், கீரமங்கலம், செரியலூர், கரம்பக்காடு, நகரம், சேந்தன்குடி, கொத்தமங்கலம் உட்பட பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

கீரமங்கலத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கி பாஜகவை வீழ்த்தும் தலைவராக உருவெடுத்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரைக் கேட்டாலே பாஜக அப்படியே அதிருது.

மத்தியில் ஒரு பாசிச ஆட்சி, 2018 ல் கஜா புயலில் பாதிக்கப்பட்டோம், இப்ப மிக்சாம் புயலால் பாதிக்கப்பட்டோம், சென்னை, தூத்துக்குடி வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கு சென்று அவர்களுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கினார். பிரதமரை நேரில் சந்தித்து தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக போய் பாதிப்பிற்கு நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அமைச்சர்களை அனுப்பி ஆய்வு செய்தார். பாதிப்பு என்ன என்பதை அறிக்கையாக கொடுத்தார்கள் ஆனால் இந்த நிமிடம் வரை ஒரு பைசா கூட வழங்காத பாசிச பாஜகதான், இந்த நாட்டை ஆள்கின்றவர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.  நாம ஜிஎஸ்டி வரி கட்றோம். ஆனால் நமக்கு எதுவும் செய்யாமல் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு லட்சம் கோடி கடன் கொடுக்கிறார்கள். கொடுத்த பிறகு தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் இங்கே கல்விக் கடனுக்கு வட்டி மேல் வட்டி போட்டு வீட்டுக்கு வந்து மிரட்டிட்டு போறாங்க.

Minister Meyyanathan campaign in support of Congress candidate Karti Chidambaram

தப்பித் தவறி அதிமுகவும், பாஜகவும் வெற்றி பெற்றால் இந்த நாட்டில் நடக்கும் கடைசித் தேர்தல் இது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடாதீர்கள். அதிபர் ஆட்சி போல வரும், அதிகாரங்கள் பறிக்கப்படும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது. ஆகவே 130 கோடி மக்களையும் பாதுகாக்கின்ற பொறுப்பு உங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலவச மின்சாரத்தை கலைஞர் தந்தார், ஆனால் அதிமுக எடப்பாடி ஆட்சியில் 10 ஹெச்.பிக்கு 3 லட்சம் பணம் வாங்கிட்டு மீட்டர் வச்சு பணம் வசூலிச்சாங்க. விவசாயிகளுக்கான அந்த மின்சாரத்தை இலவச மின்சாரமாக்கியது நம்ம முதலமைச்சர் தான். இன்று தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஆகவே தான் அவரால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியா கூட்டணியை ஆதரியுங்கள்” என்றார்.

Next Story

“தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே வழங்க முடியும்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத் கை சினத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு கடலூர் தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடும் விஷ்ணு பிரசாத்தையும்,  சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் தொல். திருமாவளவனையும் கரம் கோர்த்து பானை மற்றும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 Only a DMK government can deliver sustainable development in Tamil Nadu says  Kharge

இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், “இந்திய கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் ஆகியோரின் நினைவுகளை இத்தருணத்தில் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.  பாரதிய ஜனதா அரசு பல்வேறு வரிவிதிப்புகள் மூலம் ஏழை எளிய மக்களை வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் பிற்படுத்தப்பட்ட விவசாய பெருங்குடிகள் ஆகியோரின் நிலை மிக மிகுந்த மோசமான உள்ளது. அவர் பிரதமர் ஆவதற்கு முன்பும் பிரதமர் ஆனதற்கு பின்பும் அடிக்கடி கூறி வருவது 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதையும், ஒவ்வொரு குடும்பத்தாரின் வங்கி கணக்கில் 15 லட்சம் கருப்பு பணத்தை மாற்றி தருவேன் எனவும் வாக்குறுதி தந்தார் அதில் ஏதாவது ஒன்றை செய்துள்ளாரா?

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.  இந்த பிரச்சார கூட்டத்தின் வாயிலாக நான் இரண்டு விஷயங்களை மட்டும் மக்கள் மன்றத்தில் கூற விரும்புகிறேன். ஒன்று இந்திய ஜனநாயகம் பாதுகாக்கப்படும். மற்றொன்று அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். நான் 53 ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினர், எம்.பி. ராஜ்யசபா உறுப்பினர் என பல்வேறு பதவிகளில் இருந்து  வருகிறேன். ஆனால், இந்த ஆட்சியின் போது தான் கவர்னர் என்ற பதவியின் செயல்பாடுகள் மிகுந்த கேள்விக்குரியதாக உருவாகியுள்ளது.  அவர் பட்ஜெட் கூட்டத்தொடர், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் போன்றவைகளில் எல்லை மீறுவதை காண முடிந்தது.

பாஜக அரசை  எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மிக முக்கிய பங்காற்றுகிறார். அதிலும் குறிப்பாக நீட் தேர்வு போன்றவற்றை எதிர்ப்பதில் மிக உறுதியாக உள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய சிஸ்டத்தை நிச்சயம் மாற்றுவோம். விவசாயிகள் தற்போது மிகுந்த மோசமான நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க சிறப்பு நடவடிக்கைகளை காங்கிரஸ் கவர்மெண்ட் நிச்சயம் மேற்கொள்ளும்.

தமிழகத்தில் நீடித்த வளர்ச்சியை திமுக அரசால் மட்டுமே தர முடியும். பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. ஏன் விலை உயர்வு என்று கேட்டால், மோடி அரசு குருடாயில் விலை உயர்வு என்கிறது. ஆனால் உலக அளவில் குருடாயில் விலை குறைந்த போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இதனால் ஏழை எளிய மக்கள் விலைவாசி உயர்வால் அவதி அடைந்து வருகின்றனர்.

ஆயிரம் மோடி வந்தாலும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் ஒன்றும் அசைக்க முடியாது.  இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள எஸ்சி எஸ்டி பிற்பட்டோர் பிரிவினருக்கான காலியிடங்களை நிச்சயம் நிரப்புவோம் . இதனால் சுமார் 30 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவர் எனவே அனைவரும் கை சின்னத்திற்கும் பானை சின்னத்திற்கும் வாக்களித்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன்,  காங் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, மாநில செயலாளர் சந்திரசேகர், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.