ADVERTISEMENT

“கலைஞர் மாதிரியே ஸ்டாலினும் ஆரம்பிச்சிட்டாரு..” -கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ‘தாறுமாறு’ பேச்சு!

09:42 AM Sep 18, 2019 | kalaimohan

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் இன்று அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கையில் வீரவாள் தந்தனர். அண்ணா பிறந்தநாள் விழா கூட்டம் என்றாலும், அமைச்சரின் பேச்சில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான தாக்குதலே கடுமையாக இருந்தது.

கடமை; கண்ணியம்; கட்டுப்பாடு என்பது அறிஞர் அண்ணாவின் முக்கிய கொள்கை முழக்கமாகும். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய இந்த அடிப்படை பண்புகளை அவர் வலியுறுத்தினார். அவரது பிறந்தநாள் விழாவில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆற்றிய உரை இது -

ADVERTISEMENT

ADVERTISEMENT

“அண்ணாவின் குடும்பத்தைக் காப்பாற்றியவர் ஜெயலலிதா. அண்ணாவை உரிமை கொண்டாடுகிற கட்சி.. பேசுகின்ற தகுதி அதிமுகவுக்குத்தான் உண்டு. இன்று ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுகவுக்குத் துளியும் கிடையாது. அந்த யோக்கியதையும் ஸ்டாலினுக்குக் கிடையாது. அண்ணாவைப் பற்றி அதிகம் விமர்சனம் பண்ணியவர்கள்.. காங்கிரஸைக் காட்டிலும் கலைஞர் கருணாநிதிதான் அதிகமாகப் பேசினார்; திட்டினார்.

அதிமுக தொண்டன் எப்படிப்பட்டவன் தெரியுமா? எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டான். எம்.எல்.ஏ. சீட் கேட்க மாட்டான். பிரசிடென்டுக்கு நிற்கமாட்டான். கவுன்சிலர் சீட் கேட்கமாட்டான். மந்திரி ஆகணும்னு கனவு காணமாட்டான். ஒண்ணுமே கேட்க மாட்டான். எலக்ஷன் வந்துட்டா கொடியைப் பிடிச்சிக்கிட்டு, ரெட்டை இலைக்கு ஓட்டு போடுங்கன்னு கேட்கிற கூட்டம் அதிமுகவுல இருக்கிறவரை இந்த இயக்கத்தை.. ஒன்றரை கோடி தொண்டர்கள் அதிமுகவுல இருக்கிறவரைக்கும் எவனும் அழிக்க முடியாது. காரணம் இது மனிதன் ஆரம்பித்த கட்சி இல்ல. புனிதர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி. விழுவதுபோல் தெரியும். ஆனால்.. விழாது. விழும்.. ஆனால்.. எழும்.

அதிமுகவை அழிப்பதற்கு கலைஞர் காலத்திலேயே 46 ஆண்டு காலமாக முயற்சி செய்து பார்த்தாரு. முடியவில்லை. இன்றைக்கு ஸ்டாலின் புறப்பட்டிருக்கிறார். உங்க அய்யாவாலேயே முடியலியே தம்பி. நீ எங்களுக்கெல்லாம் கு....., உன்னால அதிமுகவை அழிக்க முடியுமா? அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது. இனிமே வரும் எலக்ஷன்ல அதிமுக பயங்கரமாக ஜெயிக்கப்போகுது. ஒண்ணு நாங்குநேரி. இன்னொண்ணு விக்கிரவாண்டி. ரெண்டுலயும் கடுமையா ஜெயிக்கப் போறோம்.

ஓ.பி.எஸ்ஸுக்கும் எடப்பாடியாருக்கும் பிரச்சனை வரணும்னு ஆசைப்படறாங்க. எடப்பாடியார் எல்லாரையும் அனுசரிச்சி செல்லக்கூடிய ஒரு தலைவர். ஓ.பி.எஸ். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவர். இருவரும் இணைந்து இந்த இயக்கத்தை வழிநடத்துவதைப் பொறுக்க முடியாத ஸ்டாலின், இன்றைக்கு ஒப்பாரி வைக்கிறார். தலைவிரித்து ஆடுகிறார். இந்த ஆட்சி இருக்காதுன்னு சபாநாயகர்கிட்ட போறார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெறுவோம்கிறார். ஆட்சி அப்படியே மாறும்கிறார். ம..... மாறும்யா. எங்கே மாறும்? நீ கொடுக்கிற சவுண்டைவிட நூறு மடங்கு சவுண்டு நாங்க கொடுப்போம். அதிமுக எம்.எல்.ஏ. 20 பேரை விலைக்கு வாங்கப் போறாங்களாம். உங்க கட்சியில இருக்கிற 60 எம்.எல்.ஏ.க்களை நாங்க வாங்கிருவோம். நாங்க வாங்கவே வேண்டாம். அவங்களே வந்திருவாங்க. ஸ்டாலினுக்கு கிறுக்கு பிடிச்சுப் போச்சுன்னு அவங்க கட்சிக்காரங்களே சொல்லுறாங்க.

அந்த முதலமைச்சர் சீட்ல ஒரு நாளாச்சும் உட்கார்ந்துட்டு, மறுநாள் எந்திரிச்சி போயிடறனே. கொஞ்சம் எடப்பாடிகிட்ட சொல்லுங்களேன். இப்படி கேட்கிறாரு ஸ்டாலின். அவரு அய்யாவை மாதிரியே இவரும் ஆரம்பிச்சிட்டாரு. அமெரிக்காவிலிருந்து என்னுடைய நண்பர் எம்.ஜி.ஆர். வந்தவுடன் ஆட்சியைக் கொடுத்துவிடறேன். அதுவரைக்கும் ஆட்சியைக் கொடுன்னு கேட்டாருல்ல அவரு. அதேமாதிரி இவரும் ஆரம்பிச்சிட்டாரு. உனக்கு அந்த சீட் கிடையாது. எடப்பாடியார் அந்த சீட்ல பெர்மனென்டா உட்கார்ந்திட்டாரு. அரசியல் ரீதியா உங்க கதை முடிஞ்சு போச்சு. பிறக்கிறபோதே அதிமுக கொடியோடு பிறக்கக்கூடிய கட்சி அதிமுக. பெட்டிஷன் போட்டு பிழைக்கிற கூட்டம் திமுக கூட்டம். நாட்டுக்காக உழைக்கிற கூட்டம் அதிமுக கூட்டம். உள்ளாட்சி தேர்தலில் அனைத்தையும் கைப்பற்றுவோம்.” என்றார்.

‘அமைச்சர் வாயிலிருந்து அடுத்து என்ன கெட்ட வார்த்தை வரும்? கைதட்டலாம்; விசிலடிக்கலாம்..!’ என்ற எதிர்பார்ப்புக்குக் குறை வைக்காமல், மேடை நாகரிகம் குறித்து துளியும் கவலைப்படாமல், மனம்போன போக்கில் பேசுவது கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு வாடிக்கையாகிவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT