Advertisment

தமிழுக்காகத் தலையை அடமானம் வைப்போம்; போராளிகள் ஆவோம்! -கே.டி.ராஜேந்திரபாலாஜி கொக்கரிப்பு!

சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,

Advertisment

“இந்தி திணிப்பு குறித்து ரஜினி அவர் மனதில் உள்ளதை தெரிவித்திருக்கிறார். விருப்பப்பட்டால் அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம். மொழிவாரியாக உள்ள இந்தியாவில் எந்த மொழியை, எந்த மாநிலத்திலும் திணிக்க முயன்றாலும் பிரச்சனை ஏற்படும். அந்தந்த மாநில மக்கள் அவரவர் மொழியை நேசிப்பார்கள். அதேபோல், தமிழர்களாகிய நாமும் தமிழை நேசிக்கிறோம். ஆட்சியில் உள்ளதால், இந்தி திணிப்பு குறித்து நாங்கள் வெளிப்படைத் தன்மையுடன் பேசவில்லை. அதற்காக எங்களுக்கு தமிழ் மீது பற்றில்லை என்று கூறுவது தவறான கருத்து. தமிழகத்தில் இந்தி திணிப்பு நிலை ஏற்பட்டால், தமிழ் மொழிக்காகவும், தமிழ் உரிமைக்காகவும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் போராளிகளாக நின்று போராடுவார்கள்.

minister rajendra balaji press meet

இந்தி திணிப்பு குறித்து அமித்ஷா பேசவில்லை. இந்தி மொழியை பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பிரச்சனை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழுக்காக உழைக்கும் கூட்டம் அதிமுக, தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தும் கூட்டம் அதிமுக அல்ல. தமிழுக்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் தலையை அடமானம் வைத்தாவது தடுப்போம். தமிழுக்காகப் போராடுவோம், களம் காணுவோம். ஆனால் எந்த நிலையிலும் சமரசத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம்.

Advertisment

கமல்ஹாசன் ஹைடெக் அரசியல் செய்து வருகிறார். வீடியோவில் பேசி கருத்தை வெளியிடும் ஹைடெக் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. சாமானிய மக்களை நேரில் சந்திக்காமல் வீடியோ வெளியிட்டு கருத்துக்களைப் பதிவிட்டால் யாரும் கேட்கமாட்டார்கள். கிண்டலடித்துவிட்டுச் செல்வார்கள். பிரச்சனை முக.ஸ்டாலின் மூலமாக வந்தாலும் கமல்ஹாசன் மூலமாக வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். மன்னர் காலத்தில் செய்த சாதனைகளை தற்பொழுது மக்களாட்சியில் செய்து சாதனை படைத்து வருகிறார் முதல்வர். அதிமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு பாதுகாக்கின்றனர்; போற்றுகின்றனர்

விஜய் உள்ளிட்ட எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் வாக்களிப்பார்கள். வணிக ரீதியாக ஆவின் பொருட்கள் உலக அளவில் சென்று விற்பனையாகி வருவது தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை. ஆவினில் உச்சகட்ட வெண்மைப் புரட்சி ஏற்பட்டு வருகிறது நாள் ஒன்றிற்கு 38 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் 50 லட்சம் லிட்டாராக உயர்த்துவதே இலக்காக உள்ளது. விவசாயத்திற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய தொழிலாக பால் உற்பத்தி தொழிலை உருவாக்க கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார்.

admk Hindi imposition minister rajendra balaji
இதையும் படியுங்கள்
Subscribe