Minister who provided oxygen ambulance for the people at his own expense ..!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. சில நாட்கள் முன்புவரை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கரோனா பரவல் அதிகமாக இருந்தது. தற்போது சென்னையில் நோய்த் தொற்று பாதிப்பு தினசரி எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. ஆனால், தமிழகத்தின் முக்கிய வணிக பகுதிகளில் ஒன்றான கோயம்பத்தூரில் தற்போது நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

Advertisment

கோயம்பத்தூரை பொறுத்தவரையில் கோயம்பத்தூர் மட்டுமின்றி அண்டை பகுதிகளிலிருந்தும் கரோனா சிகிச்சைக்காக வருகிறார்கள். அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. அம்மாவட்டத்தில் தற்போது மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல் அம்மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் இதுவரை கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்நிலையில், ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன்வசதியுடன் கூடிய படுக்கை வசதி குறைந்து காணப்படுகிறது. இதனை அதிகப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சரின் ஆலோசனைப்படி திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள கஸ்தூரி ரெட்டியார் மேல்நிலைப் பள்ளியில் ஆக்சிஜன் வசதிகள் கூடிய கரோனா வார்டு அமைப்பதற்காக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சக்கரபாணி,“கரோனா தடுப்பு பணிகளுக்காக ஒட்டன்சத்திரம் பகுதியில் 300 படுக்கை வசதிகளுடனும், பழனி பகுதியில் 500 படுக்கை வசதிகளுடனும் கூடிய கரோனா வார்டுகள் அமைக்கப்பட உள்ளன. எனது சொந்த செலவில் ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் பகுதிகளில் 32 லட்சம் மதிப்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, ஒட்டன்சத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் காசி முருக பிரபு, நகராட்சி ஆணையர் தேவிகா, வட்டாட்சியர் சசி, டிஎஸ்பி அசோகன் உட்பட அதிகாரிகளும் கட்சியினரும் கலந்துகொண்டனர்.